“கணக்கு பாடம் கஷ்டம் என்று அதனை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா?” என மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.
இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நேற்று இரவு அந்தணர்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி, புரட்சித் தமிழகம் கட்சியை சார்ந்த ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த மாநாட்டில் பேசியவர்கள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி கூறியதாவது:-
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்று இல்லாத ஒன்றை முன்வைத்து தேசிய அளவில் தனது கருத்துக்கு நான்கு பேர் தேவை என தமிழக முதல்வர் கூட்டங்கள் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்று மத்திய அமைச்சருக்கு தெரியாததை கூட இவர்கள் பேசி வருகின்றனர். தொகுதி மறு சீரமைப்பு என ஒன்றிய அரசின் திட்டத்தில் இல்லாதது. அதை இவர்கள் இருப்பதாக கூறி வருகின்றனர்.
இந்தியாவில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை. ஆனால், தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நான் தெலுங்கானாவில் வசிக்கிறேன். எனது குழந்தை படிக்கும் பள்ளியில் தெலுங்கு கட்டாயம். மற்ற மொழி பாடங்கள் அவரவர் விருப்பம் என உள்ளது. மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என்று கூறினால் பிற பாடங்களை எப்படி மாணவர்கள் படிக்க முடியும்? கணக்கு பாடம் கஷ்டம் என்று அதனை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா? இலகுவான முறையில் கற்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமே தவிர அதனை நீக்க முடியாது.
தமிழகத்தில் பல்லாண்டு காலமாகவே, பிராமணர்களை இழிவுபடுத்துவதும், அச்சுறுத்துவதும், சாதியை குறிப்பிட்டு பேசுவதும் தொடர்ந்து வருகிறது. ஆட்டிப்படைக்கும் திராவிடத்தின் நோய்க்கு மருந்து கண்டுபிடித்தே ஆக வேண்டும். நோயாளி இறந்த பிறகு அதற்கான மருந்து கண்டுபிடித்து பயன் இருக்காது என்று கூறினார்.
மேலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிராமணர்களுக்கென நலவாரியம் அமைத்தால் 5 லட்சம் பிராமணர் வாக்குகளை திமுகவிற்கு பெற்றுத் தருவேன் என நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியது குறித்த கேள்விக்கு, “அவர் ஒரு நல்ல காமெடி நடிகர்” என்று நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.