கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் டி.ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தினார்.
இது குறித்து நாடாளுமன்ற விதி எண் 377-யின் கீழ் மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் பேசியதாவது:-
கடந்த 2013-ஆம் ஆண்டுக்கும், 2016-ஆம் ஆண்டுக்கும் இடையே இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் தலைமையில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 5,000 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுகள் தொடர்பான அறிக்கையை அந்தத் தொல்லியல் ஆய்வாளர் ஏற்கெனவே மத்திய அரசிடம் சமர்ப்பித்துவிட்டார். ரேடியோகார்பன் சோதனைகள் மேற்கொண்டதில் அந்தத் தொல்பொருட்கள் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறியப்பட்டது. அதற்குப் பிறகு 4 முதல் 9 ஆம் கட்டம் வரையிலான அகழ்வாய்வுகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டதோடு அந்த அறிக்கைகளையும் வெளியிட்டுவிட்டது. ஆனால், முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுகள் தொடர்பான அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை இதுவரை வெளியிடவில்லை.
அந்த அகழ்வாய்வுகளைத் தலைமையேற்று நடத்திய தொல்லியல் ஆய்வாளர் சமர்ப்பித்த 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை, முக்கியமான வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது. கீழடி அறிக்கையை வெளியிடுமாறு இந்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையின்போது இன்னும் 9 மாதங்களுக்குள் அந்த அறிக்கை வெளியிடப்படும் என மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதியளித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 2024 பிப்ரவரி 27 ஆம் தேதியிட்ட தனது உத்தரவில் ஒன்பது மாதங்களுக்குள் அந்த அறிக்கையை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு ஆணையிட்டது.
அந்தக் காலக்கெடு 2024 நவம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டது. இதன்பிறகும், இந்திய தொல்லியல் ஆய்வகம் அந்த அறிக்கையை வெளியிடப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்தப் பின்னணியில், இனிமேலும் தாமதம் செய்யாமல் கீழடி அறிக்கையை வெளியிடுமாறு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.