டெல்லியில் எந்த முக்கிய நபரையும் பார்க்க வரவில்லை: எடப்பாடி பழனிசாமி!

“முக்கிய நபர் யாரையும் சந்திக்க வரவில்லை, டெல்லியில் திறக்கப்பட்டிருக்கும் அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்தேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென டெல்லிக்கு விசிட் அடித்திருக்கிறார். இந்தப் பயணம் குறித்து அதிமுக தரப்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் இல்லை.

டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “முக்கிய நபர் யாரையும் சந்திக்க வரவில்லை, டெல்லியில் திறக்கப்பட்டிருக்கும் அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் கடந்த மாதம் புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நிலையில் தான் அந்த அலுவலகத்தை பார்வையிட தாம் டெல்லி வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அமைக்கும் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு உதிரி கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கும் அக்கட்சிக்கும் ஏற்பட்டுள்ள மனக்கசப்பு மற்றும் பாஜகவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னும் உறுதியான முடிவு எடுக்காததும் திமுக கூட்டணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக, பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் ஒருவரையொருவர் பெரிய அளவில் விமர்சனம் செய்யாமல் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை மட்டும் கூறி வரும் நிலையில், திடீர் பயணமாக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளது தமிழக அரசியலில் பல யூகங்களை கிளப்பி இருக்கிறது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.