தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு இவ்வளவு அழகாக பாதுகாக்கப்படுவதற்காக தமிழக ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் பார்த்திபன் கூறினார்.
உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மார்ச் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பார்த்திபன் கருப்பு நிற சட்டை அணிந்திருந்தார். அதில் தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. இதுகுறித்து பார்த்திபன் பேசியதாவது:-
நான் சினிமாவில் நடித்த போது என்ன சம்பாதித்தேனோ அதில் ஒரு பகுதியை பார்த்திபன் மனிதநேய மன்றம் என்ற பெயரில் ஒரு மன்றத்தை ஆரம்பித்து அதன் மூலம் இந்த சமூகத்திற்கு என்ன நல்லது செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறேன். அது போல் செய்ததால்தான் இந்த அரங்கில் எனக்கு மரியாதை கிடைத்திருக்கிறது. நான் இந்த அரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளேன். ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நான் கொடுத்த கிறுக்கல்கள் என்ற புத்தகத்தில் வரும் வருமானத்தில் ஒரு பகுதி கூட அந்த மன்றத்தில் போய் சேரும்.
இப்போது ஆளுநர் குறித்து நான் சொல்ல வேண்டியது இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எவ்வளவு மேன்மையானது, அதை யார் நடத்துகிறார்கள் என்பது மிகவும் அவசியமானது. ஆளுநர் மாளிகைக்கு வந்ததிலிருந்தே தமிழ் நன்றாக ஒலித்து கொண்டே இருக்கிறது. தமிழில் பாடல் கேட்பது, கலாச்சாரம் மிகுந்த விளக்கு ஏற்றுதல், தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு இவ்வளவு அழகாக பாதுகாக்கப்படுவதற்காக தமிழக ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் பேசினால் ஆளுநருக்கு புரியுமா என அங்கிருந்த அதிகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர் ஆளுநர் தற்போது தமிழ் கற்றுக் கொண்டு வருகிறார். அதனால் நீங்கள் பேசுங்கள் அவருக்கு புரியும் என்றார். அதனால் தமிழ் புத்தகங்களை அவருக்கு கொடுத்திருக்கிறேன். நானும் அவர் முன்பு தமிழில் பேசுகிறேன். தமிழ் அவருக்கு (ஆளுநருக்கு) எந்த அளவுக்கு புரிகிறது என்றால் ஒருவர் பேச ஆரம்பித்த 5 நிமிடங்களிலேயே அந்த மனிதர் யார் எப்படிப்பட்டவர் என்பது தெரிகிரது.
பிறருக்கு உதவி செய்யும் சந்தோஷம் வெளியில் தெரியாது. அது ஒரு விதமான கர்வம். காசநோய் குறித்து நிறைய பேசினார்கள். அவர்களை விட நான் ஒன்றும் பேசிவிட போவதில்லை. ஒருவருக்கு ஒருவர் உதவுவது குறித்துதான் நான் பேச போகிறேன். திரைப்படங்கள் போடுவதற்கு முன்பு சினிமா தியேட்டர்களில் ஒன்று போடுவார்கள், “புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்”. இதை யார் புகைப்பிடிக்கிறார்களோ அவர்கள் பார்ப்பதே கிடையாது. நான் என் வாழ்க்கையில் புகைப்பிடித்ததே இல்லை. அதனால் தைரியமாக காசநோய் குறித்து பேச தகுதி உள்ளது. சினிமாவில் மட்டும்தான் சிகரெட் பிடிப்பது போல் நடித்திருக்கிறேன். அதுவே ஒழுங்கா நடிக்க தெரியாது. என்னை ஹீரோயின்கள் எல்லாம் திட்டுவார்கள், “என்னய்யா நீ இப்படி தம் அடிக்கிறேனு”. இது ஏன் என்றால் என் அப்பா நிறைய சிகரெட் பிடித்திருக்கிறார்கள். அது எனக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நான் சொல்ல போறதை கேட்டு தயவு செய்து கவர்னர் தவறாக எடுத்துக்க கூடாது. எங்க அப்பா பிடித்த பீடியின் பெயர் கவர்னர் பீடி. நான் காமெடிக்காக சொல்லவில்லை. அந்த காலகட்டத்தில் இருந்தவர்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். எங்கப்பாகிட்ட நான் கேட்கும் போது கவர்னரே பீடி பிடிக்கும் போது நான் பிடிச்சா என்னப்பானு கிண்டல் செய்வார்.
பொருளுக்கு பெயர் வைக்கும் போது அங்கு சென்சார் இருக்க வேண்டும். உன்னதமான பதவியான கவர்னர் பெயரை பீடிக்கு வைத்திருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்க ஒரு விஷயம். அந்த காலத்தில் இருந்தது , இப்போது அந்த பீடியெல்லாம் இல்லை. என்னை போய் வாங்கி வரசொல்வார்கள். அப்பா நான் படித்துக் கொண்டிருக்கும் போது பீடி வாங்கிட்டுனு சொல்லும் போது எனக்கு மனதிற்கு வருத்தத்தை கொடுத்த விஷயமாகிவிட்டது. அவருக்கு கேன்சர் வந்து மிகவும் கஷ்டப்பட்டு இறந்ததை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். காச நோயை விட கொடியது காசு நோய். உலகிலேயே பணத்தை விட பெரிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றையும் பணம் கொடுத்துதான் வாங்க முடியும் என்ற ஒரு பெரிய நோய் இருக்கிறது. காசநோய் இருப்போருக்கு உதவுங்கள். அவர்களை ஒதுக்காதீர்கள். அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுங்கள். இவ்வாறு பார்த்திபன் கூறினார்.
உலக காசநோய் தினத்தில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஏராளமான சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ஆளுநர் ரவி அவர்கள், விரிவான பொது சுகாதார அணுகுமுறை மூலம் காசநோயை எதிர்ப்பதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைத்தார்.
சமூகத்தின் மகத்தான உள்ளார்ந்த வலிமையை வலியுறுத்திய ஆளுநர், காசநோய்க்கு எதிரான இந்தியாவின் தீர்க்கமான போராட்டத்தை விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கட்டுக்கதைகளை பொய்யாக்குதல் மற்றும் ஆழமாக வேரூன்றியுள்ள தடங்கல்களை உடைத்தல் போன்ற வழிகளில் தீவிரப்படுத்த மேலதிக பொதுமக்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளுக்கு வலுவான அர்ப்பணிப்பு தேவை என்றும் #காசநோய்இல்லாஇந்தியா மற்றும் #ஃபிட்இந்தியா போன்ற நோக்கத்துக்கு அவை ஓர் அத்தியாவசியமான படி என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.