கல்வி உதவித்தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும்: எம்.பி வில்சன்!

தி.மு.க எம்.பி வில்சன் பாராளுமன்றத்தில் போஸ்ட் – மெட்ரிக் மற்றும் ப்ரீ – மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பினை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தக் கோரி உரையாற்றினார்.

இதுகுறித்து தி.மு.க எம்.பி வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்கள், போஸ்ட்- மெட்ரிக் மற்றும் ப்ரீ- மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பானது நீண்ட காலயமா ரூ.2.5 லட்சம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.

இந்த இரண்டு லட்சம் என்கிற வருமான வரம்பானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் இணைந்த திருத்தங்களை செய்யலாம் என்ற வீதிமுறையின் கீழ் 2010 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில் திருத்தமானது கடைசியாக கடந்த 2013 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், கல்விச் செலவுகள் மற்றும் பணவீக்கம் அதிகரித்த போதிலும், வருமான உச்சவரம்பு மற்றும் உதவித்தொகைகள் மாற்றம் காணாமல் உள்ளன.

மாறாக, இந்திய அரசாங்கமானது சமீபத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) வருமான வரம்பினை ரூ.8 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதேபோன்று எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கான தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் உயர்தர கல்வித்திட்டம் போன்ற திட்டங்களுக்கான வரம்பு ரூ.8 லட்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், போஸ்ட்- மெட்ரிக் மற்றும் ப்ரீ- மெட்ரிக் உதவித்தொகை திட்டங்களுக்கு இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஏராளமான தகுதி படைத்த மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெறமுடியவில்லை.

உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பின் அறிக்கையின்படி, எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதமானது, மற்றவர்களை விட மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த இடைவெளியைக் குறைப்பதிலும், உயர்கல்விக்கான சமமான அணுகலை உறுதி செய்வதிலும் நாம் தீவிரமாக இருக்கிறோம் என்றால், கல்வி உதவித்தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும்.

எனவே, போஸ்ட் – மெட்ரிக் மற்றும் ப்ரீ – மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பினை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.