100 நாள் வேலைவாய்ப்புத் திட்டமான “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட”த்துக்காக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 4,034 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று லோக்சபாவில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி வலியுறுத்தினார்.
லோக்சபாவில் இன்று கனிமொழி எம்பி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 91 லட்சம் பேர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பங்க்கேற்றுள்ளனர். இந்த திட்டத்தில் பங்கேற்றவர்களில் 86% பெண் தொழிலாளர்கள்; 29% பேர் தாழ்த்தப்பட்ட- பழங்குடி மக்கள். அத்துடன் ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் மாற்றுத் திறனாளிகளும் பயனடைகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய தொகை ரூ 2,985 கோடி. இந்த தொகையை மத்திய அரசு இதுவரை தரவில்லை. இதனால் கடந்த 4,5 மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஊதியமும் தரப்படவில்லை. இந்த திட்டத்துக்கான மொத்த நிலுவைத் தொகை ரூ.4,034 கோடி. இதனை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பினார். இதுவரை இந்த தொகை விடுவிக்கப்படவில்லை. ஆகையால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்பி வலியுறுத்தினார்.