ராகுல் பிரிட்டன் குடிமகன் என சுப்பிரமணியன் சுவாமி போட்ட வழக்கு ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவரும் ரேபரேலி தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்றும் அவரிடம் பிரிட்டன் குடியுரிமை இருக்கிறது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் ஒருவர் இரட்டை குடியுரிமையை சட்டப்பூர்வமாகவே வைத்திருக்கலாம். அதாவது அமெரிக்க நாட்டின் குடியுரிமையைக் கொண்ட ஒருவர் வேறு ஒரு நாட்டின் குடியுரிமையையும் வைத்திருக்கலாம். உதாரணத்திற்கு எலான் மஸ்க்கை சொல்லலாம். அவரிடம் அமெரிக்கா, கனடா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் குடியுரிமை இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இதுபோல பல்வேறு குடியுரிமைகளை வைத்திருக்கச் சட்டத்தில் இடமில்லை. நமது நாட்டின் சட்டப்படி ஒருவர் இந்தியக் குடியுரிமையை வைத்திருந்தால் அவர் வேறு ஒரு நாட்டின் குடியுரிமையை வைத்திருக்கக் கூடாது. ஒருவேளை வேறு ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட நபர் இந்தியக் குடியுரிமையைத் துறக்க வேண்டும். இந்தியக் குடியுரிமையை வைத்திருக்கும் ஒருவர் வேறு நாட்டின் குடியுரிமையை வைத்திருப்பது சட்டவிரோதமாகவே கருதப்படுகிறது.

இதற்கிடையே ராகுல் காந்தி சட்டவிரோதமாக இரட்டை குடியுரிமையை வைத்திருப்பதாகவும் அவர் பிரிட்டன் குடியுரிமையை வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கர்நாடகா வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான விக்னேஷ் ஷிஷிர், பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தனர். இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர். மசூதி மற்றும் அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் 8 வாரக் காலம் அவகாசம் கோரினார். இருப்பினும், 8 வாரக் கால அவகாசம் வழங்க மறுத்த ஐகோர்ட், மத்திய அரசுக்கு நான்கு வாரக் கால அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தது. ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட அலகாபாத் ஐகோர்ட், வழக்கு விசாரணை ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இது குறித்த புகாரை அளித்திருந்தார். அதில் பிரிட்டன் நாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ராகுல் காந்தி தன்னை பிரிட்டிஷ் குடிமகன் என்று குறிப்பிட்டுள்ளதாகச் சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டினார். ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையை வைத்திருப்பது இந்திய அரசியலமைப்பு மற்றும் குடியுரிமைச் சட்டத்தை மீறுவதாக அவர் கூறினார். மேலும், ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமையைக் குறித்துத் தெளிவுபடுத்துமாறு மத்திய அரசு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகக் குறிப்பிட்ட சுப்பிரமணியன் சுவாமி, இருப்பினும், ராகுல் காந்தி தரப்பு இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறினார். அதன் பிறகு மத்திய அரசும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை மட்டுமே சுப்பிரமணியன் சுவாமி கோருகிறார். மத்திய அரசிடம் இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் பெற வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அப்போது தான் அரசு தரப்பு வழக்கறிஞர் 8 வாரங்கள் கால அவகாசம் கோரியுள்ளார். இருப்பினும், 8 வார கால அவகாசம் தர முடியாது எனக் கூறிய நீதிபதிகள், 4 வாரக் கால அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.