வவுனியாவில் நாளை தமிழக – இலங்கை மீனவர் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்!

இலங்கையில் உள்ள வவுனியாவில் தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

கடந்த ஜனவரியிலிருந்து 20 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு 148 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலங்களை விட, தற்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளதுடன், மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது. மேலும், இலங்கை கடற்பகுதியில் தமிழக விசைப்படகுகள் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் இலங்கையின் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு தமிழ் மீனவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள வவுனியாவில் நாளை (புதன்கிழமை) தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ், சுரேஷ் (நாகை மாவட்டம்) ஆகியோர் கொண்ட 6 பேர் இன்று விமான மூலமாக புறப்பட்டு இலங்கை சென்றடைந்தனர்.

இலங்கை தரப்பிபில் யாழ்ப்பாணம் மாவட்டம் வர்ண குல சிங்கம், சுப்பிரமணியம், அன்னராசா, முல்லைத்தீவு மாவட்டம் மரிய ராசா, மன்னார் மாவட்டம் ஆலம், சங்கர், கிளிநொச்சி மாவட்டம் பிரான்சிஸ், அந்தோணி பிள்ளை, அன்ன ராசா ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையை நடத்துவது, இலங்கை கடற்பரப்புக்குள் இழுவை மீன்பிடியை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும், என தெரிகிறது.