நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன்!
2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு காலதாமதானது என்பது உண்மையா? பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டதா? அப்படியானால் அதன் விவரங்கள்? ஆகிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன்.
அதற்கு மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார்.
“தேசிய தேர்வு முகமை (NTA) என்னும் சிறப்பு அமைப்பானது உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான நுழைவு தேர்வை நடத்துகிறது. பிப்ரவரி 9 2024 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போலவே மே 5 2024 அன்று நீட் தேர்வு நடைபெற்றது.
2019ஆம் ஆண்டிலிருந்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய கல்வி முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நடந்த பின்னர் தேர்வில் வழக்கத்துக்கு மாறான முறைகேடுகள்/ ஏமாற்றும் நடவடிக்கைகள் ஆகியவை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இத்தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், சதித்திட்டம், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை கண்டறிந்திடும் வகையில் விரிவான விசாரணையை நடத்திட சிபிஐ யை ஒன்றிய கல்வி அமைச்சகம் கேட்டுள்ளது.
ஆகஸ்ட் 2, 2024 மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பு wp (civil) 335/2024 பத்தி 84ல் “முறையான முறைகேடுகள் நடந்ததை குறிக்கும் போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இப்போதைக்கு இல்லை. இத்தேர்வின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு முறைகேடுகள் பரவலாக நடந்தது என்னும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இல்லை.” இதே வழக்கில் 23 ஜூலை 2024 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி 26 ஜூலை 2024ல் சரிபார்க்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
22.11.2024 அன்று 2024 நீட் தேர்வில் கேள்வித்தாள் திருட்டு குறித்த வழக்கில் மொத்தம் 45 குற்றவாளிகளுக்கு எதிராக 5 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. இந்த நீட் தேர்வு தாள் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பயனாளிகள் பெயர்களையும், கேள்வித்தாளுக்கு விடையளித்த மருத்துவ மாணவர்களின் பெயர்களையும், தேர்வில் ஆள்மாறட்டம் செய்தவர்களின் பெயர்களையும் கண்டறிந்து உரிய அமைப்பிடம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கொடுத்துள்ளோம்.” என மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார். இவ்வாறு
திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.