அமேசான் நிறுவனத்திடம் 10 லட்சம் மதிப்பிலான கெட்டுப் போன பொருட்கள் இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதே போல அனைத்து கார்பரேட் நிறுவனங்களிலும் கெட்டுப் போன பொருட்கள் உள்ளன. இது குறித்து விரைவில் புள்ளி விவரங்களோடு தகவல்கள் வெளியிடுவோம். டி மார்ட் போன்ற நிறுவனங்கள் பல இடங்களில் கடைகளை அமைத்து வருகின்றன. அவற்றை தடுத்து நிறுத்துவோம் என வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மளிகை கடை தொழில்கள் வேகமாக அழிந்து வருகின்றன. ஆன்லைன் நிறுவனங்கள் தரும் அதிரடி தள்ளுபடிகளால், மளிகை கடைகளில் பொருட்கள் வாங்குவதையே மக்கள் தவிர்க்கிறார்கள். இது ஒருபுறம் எனில் டிமார்ட், ஜியோ மார்ட் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு ஊரிலும் கடை திறக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதால், அந்த ஊரில் பல மளிகை கடைகள் காற்று வாங்க ஆரம்பித்துவிட்டன. இதனால் பல ஏழை எளியோர் மளிகை கடை வைத்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் நிறுவனங்கள், கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட்டுகளுமே தற்போது மொத்த மளிகை வியாபாரத்தையும் கைப்பற்றி வருகின்றன. இதன் காரணமாக சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான மளிகை கடைகள் மூடப்பட்டு விட்டன. ஒவ்வொரு தெருவிலும் கணிசமான நபர்கள் கடை வைத்து வாழ்ந்து வந்த நிலையில், அந்த லாபங்கள் எல்லாமே ஓரிரு முதலாளிகளுக்கு செல்வதால், மளிகை வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் நாமக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42ஆவது மாநில மாநாடு மே 5ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். வணிகர்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றக் கோரி பிரகடன தீர்மானம் கொண்டு வர இருக்கிறோம். மாநகராட்சி, நகராட்சிகளில் வணிக கடைகளுக்கான வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முறையிட்டதன் அடிப்படையில் அதனை சீர் செய்ய அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. சீரமைக்கப்பட்ட வாடகை விவரங்கள் மேற்கொள்ளப்படும் என்று குழு உறுதி அளித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் முறை அதிகரித்துள்ளது. அமேசான் என்ற ஒரு இ கமார்ஸ் நிறுவனத்திடம் மட்டும் 10 லட்சம் மதிப்பிலான கெட்டுப் போன பொருட்கள் இருக்கிறது.. இதனை அந்த நிறுவனமே அறிவித்துள்ளது. இதே போல அனைத்து கார்பரேட் நிறுவனங்களிலும் கெட்டுப் போன பொருட்கள் உள்ளன. இது குறித்து விரைவில் புள்ளி விவரங்களோடு நாங்கள் தகவல்கள் வெளியிடுவோம். தமிழ்நாட்டில் தற்போது டி மார்ட் போன்ற பெரு நிறுவனங்கள் பல இடங்களில் கடைகளை அமைத்து வருகின்றன. அவற்றை தடுத்து நிறுத்துவோம். ஆன்லைன் வர்த்தகம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நாடு தழுவிய அளவில் வணிகர்களை திரட்டி போராட்டம் நடத்த இருக்கிறோம்.
வணிகர்களின் தேவைகள், கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வணிகர்கள் ஆதரவு அளிப்பார்கள். எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சிறிய வணிகர்களின் கடைகளுக்கு மட்டுமே ஆய்வுக்கு செல்கிறார்கள். அவர்களிடம் சோதனை என்ற பெயரில் லஞ்சம் வாங்கும் நோக்கில் செயல்படுகிறார்கள். ஆனால் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வுக்கு செல்வதில்லை. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெரு நிறுவனங்கள் நடத்தும் கடைகளில் சோதனை நடத்தி இருக்கிறார்களா? உணவு பாதுகாப்பு துறையில் யார் யாரெல்லாம் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் என்ற விவரத்தை முதல்வரிடம் தெரிவிக்க போகிறோம். இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.