எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்: விஜயதாரணி

“தமிழகத்தில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்” என முன்னாள் எம்.எல்.ஏவும், பாஜகவை சேர்ந்தவருமான விஜயதாரணி கூறியுள்ளார்.

காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் வழக்கறிஞராக ஆஜராகி வாதிடுவதற்காக இன்று (மார்ச் 26) நீதிமன்றத்துக்கு வந்த விஜயதாரணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அதற்குரிய ஆணையமோ அல்லது மத்திய அரசோ அறிவிப்பு வெளியிடவில்லை. நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பாக விவாதிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் தமது அரசின் தவறுகளை மறைக்கும் நடவடிக்கையாக இதனை கையில் எடுத்து, மாநில முதல்வர்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளார். அதில் சில மாநில முதல்வர்கள் மட்டுமே பங்கேற்றனர், பிற மாநில முதல்வர்கள் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளனர்.

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கின்றனர். திமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழல் உள்ளிட்ட பல துறைகளில் ஊழல் பெருகியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மக்கள் பல நிலைகளில் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆட்சியின் மீது அதிருப்தி உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போட்டியிட்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். தவெக தலைவர் விஜய் திமுக ஆட்சியின் மீது அதிருப்தி தெரிவித்து வருகிறார். அவர் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் ஆளுங்கட்சியில் இடம் பெறுவார். இல்லையெனில் வாக்குகளை பிரிக்கும் கட்சியாக மட்டுமே இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.