மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், நாடாளுமன்ற அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் வழக்கம்போல் இன்று கூடியது. அப்போது தனக்குப் பேசுவதற்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுவதாகவும், ஜனநாயகமற்ற முறையில் அவை நடத்தப்படும் அவையில் தன்னைப் பற்றி ஆதாரமற்ற கருத்துக்களை அவைத்தலைவர் ஓம் பிர்லா தெரிவித்ததாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளைப் பின்பற்றுமாறு ஓம் பிர்லா கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தி இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவைத்தலைவர் இந்தக் கருத்தைச் சொன்னதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. கடந்த வாரமும், அவைத்தலைவர் தன்னைப் பற்றிக் கருத்து தெரிவித்ததாகவும், தன்னை ஒரு வார்த்தை கூட பேச அனுமதிக்கவில்லை, அவையை ஒத்திவைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார் என்று ராகுல் கூறினார்.
மக்களவை முன்னாள் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் மக்களவையில் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உள்பட சுமார் 70 காங்கிரஸ் எம்பிக்கள், மக்களவை தலைவரான ஓம் பிர்லாவை சந்தித்து ராகுல்காந்தி பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு எதிராகக் கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-
எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்று மரபு உள்ளதாகவும், ஆனால் தான் பேச எழுந்திருக்கும் போதெல்லாம் பேச அனுமதிக்கப்படுவதில்லை. மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது. கடந்த 7-8 நாள்களாகவே இப்படிதான் நடைபெறுகிறது.
கடந்த வாரம் மகா கும்பமேளா குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்ட பிறகு, தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கும்பமேளா நடைபெற்றது நல்லது. ஆனால் வேலையின்மை பற்றி தான் பேச விரும்புகிறேன். அவைத்தலைவருக்கு என்ன சிந்தனை அணுகுமுறை இருக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் எங்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்பது மட்டும் உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.