பாம்பன் பாலத்தை திறக்க ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார் மோடி!

ராமேசுவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளார்.

பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதமே நிறைவுபெற்றது. பிரதமரின் தேதிக்காக திறப்பு விழா தள்ளிப்போன நிலையில், வருகின்ற 6 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளார் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து, ரயில்கள், கப்பல்கள் இயக்கப்பட்டு பல கட்ட சோதனைகளை ரயில்வே அதிகாரிகள் நடத்தி முடித்துள்ளனர்.

இந்தப் பாலம் பிப்ரவரி மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமரின் தேதிக்காக தொடர்ந்து தள்ளிப்போனது. இந்த நிலையில், இலங்கைக்கு வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி ஒருநாள் பயணமாக செல்லும் மோடி, அங்கிருந்து நேரடியாக ராமநாதபுரம் வருகை தந்து பாம்பன் பாலத்தை ஏப்ரல் 6 ஆம் தேதி திறந்துவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.