தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளதற்கு சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும்தான் சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது. பல நேரங்களில் ஆங்கிலத்தில் வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு சென்னை வானிலை ஆய்வு மையம் சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறது. இந்த நிலையில் திடீரென 3-வது மொழியாக இந்தி மொழியிலும் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை முன்னறிவிப்பு அறிக்கையை வெளியிட தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பதாக பெரும் சர்ச்சை, போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை வானிலை மையத்தில் இந்த நடவடிக்கை தற்போது பெரும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகி இருக்கிறது.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத மத்திய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது. பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.