10 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வெழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு தேர்வு இன்று நிறைவடைந்தது. இந்தத் தேர்வை 8.20 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உற்சாகத்தோடும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்!” எனப் பதிவிட்டுள்ளார்.