தவெக பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நமது நாட்டில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் ஆண்டுக்கு ஒருமுறையாவது பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

தீர்மானம் -1. இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருந்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்: நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிப்பது என்ற காரணத்தைக் கூறி, வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திடீரெனக் கொண்டு வந்தது. புதிய நிபந்தனைகளை உருவாக்கி, இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தீர்மானம் – 2. மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்: கடந்த 40 ஆண்டுகளாக, இதுவரை 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். குஜராத் மற்றும் இதர மாநில மீனவர்களைப் போலவே பிரதமர், தமிழக மீனவர்களையும் சமமாகக் கருதித் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

தீர்மானம்-3. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் மக்கள் பாதிக்காத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பாக ஒரு விளக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், மக்கள் பாதிக்காத வண்ணம் என்றால் எப்படி என்கிற விளக்கம் இல்லவே இல்லை. விமான நிலையத்தை யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாத வண்ணம், விவசாய நிலங்களை, நீர்நிலைகளை, இயற்கைச் சூழல்களை அழிக்காமல், வேறு இடத்தில்தான் அமைக்க வேண்டும்.

தீர்மானம் -4. இருமொழிக் கொள்கையில் உறுதி: அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்தப் பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக உள்ளது. ஆனால், கூட்டாட்சி உரிமையை மீறி, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி வேற்று மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. முரட்டுப் பிடிவாதத்துடன் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் மத்திய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான்!

தீர்மானம்-5. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை: நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை சரியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, மத்திய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகக் கடைப்பிடித்ததற்கான தண்டனை என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள். மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் தொகுதிகளான 543 என்ற எண்ணிக்கையே காலவரையின்றி தொடர வேண்டும்.

தீர்மானம் – 6. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: மத்திய அரசின் அதிகாரத்தை மையப்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, மாநில சுயாட்சியை முடக்கும் வேலையைச் செய்து வருகிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

தீர்மானம் 7. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை: மாநில அரசுக்குச் சுமார் 50 ஆயிரம் கோடி வருமானம் வரும் டாஸ்மாக் நிறுவனத்தினாலும், கட்டற்ற போதைப் பொருட்களின் புழக்கத்தினாலும் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்காமல் போதைப் பொருட்கள் தமிழகத்தில் சரளமாகப் புழங்கும் நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க. அரசை தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் – 8. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக்கணக்காகப் போராடி வருகின்றது. இதை வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கண்டுகொள்ளாமல், மறைமுகமாகப் பழிவாங்குவது போல் நடந்துகொள்கிறது. இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையே ஆகும்.

தீர்மானம் – 9 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான கையாலாகாத தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.

தீர்மானம் – 10 டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்:

தீர்மானம் – 11. சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்:

தீர்மானம் – 12. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு:

தீர்மானம் -13. கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்:

தீர்மானம்-14. சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு பகுதியில், தமிழக அரசால் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கத்திற்குத் தந்தை பெரியார் அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும்.

தீர்மானம் -15. தலைவருக்கே முழு அதிகாரம்: தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவைக் கொண்டு தலைவர் விஜய் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள். சுற்றுப்பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும் அதிகாரமும் உரிமையும் அளிக்கப்படுகிறது. மேலும், தவெகவில் புதிதாக பொறுப்பை ஏற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.