சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, தற்போதைய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி கவுன்சிலராக, மேயராக இருந்த போது, அதிகார துஷ்பிரயோகம் செய்து, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி மாற்றியதாக வழக்கு உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, தற்போதைய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி கவுன்சிலராக, மேயராக இருந்த போது, அதிகார துஷ்பிரயோகம் செய்து, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு எதிராக மோசடி, ஊழல் தடுப்பு சட்டபிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை, நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரப்பில், கடந்த 1998ம் ஆண்டு வீடு வாங்கியது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விற்பனை நடந்ததாக கூறப்படும் காலத்தில் மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்த நிலையில், வழக்கு தொடர சபாநாயகர் அனுமதியளிக்க அதிகாரம் இல்லை என வாதிடப்பட்டது. குடியிருப்பை வாங்கியதில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. எந்த மோசடியும் நடைபெறவில்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை விளக்கி வாதிடப்பட்டது. மேலும், குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் என வாதிடப்பட்டது. இதேபோல வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து புகார்தாரர் தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு மீதான உத்தரவை நீதிபதி வேல்முருகன், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கையை ஏற்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், வழக்கில் இதுவரை குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்திருக்கவில்லை என்றால், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து விசாரணையை தொடர சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.