“பெயரை மட்டும் வீராப்பாக வைத்தால் போதாது; செயலிலும் காட்ட வேண்டும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்துள்ளார் விஜய்.
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கட்சித் தலைவர் விஜய் தலைமை வகித்தார். உறுதிமொழியோடு தொடங்கிய கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதல்வரை, மத்தியில் ஆளும் பாஜகவை, பிரதமர் மோடி விமர்சித்துப் பேசினார். விஜய் பேசியதாவது:-
இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு,தயாராக வேண்டிய அவசியத்தை, நீங்கள் அனைவருமே நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி,மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?
மாநாடு தொடங்கி, நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் நிகழ்ச்சி, தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, அன்றைய தினம் நகருக்குள் எந்த திருமண மண்டபமும், அரங்கமும் நமக்கு கொடுத்துவிடக் கூடாது என்று, மாமல்லபுரம் சென்று அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஏன் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் வரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள் வந்தன? அத்தனை தடைகளையும் தாண்டி தவெக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.அது தொடர்ந்து நடக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக்காட்ட வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என்று அடிக்கடி அறிக்கைகள் கொடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்யும் ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே.
ஒரு கட்சித் தலைவனாக எனது கட்சித் தொண்டர்களையும், என் நாட்டு மக்களையும் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்றால் சென்றே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவன் எல்லாம் முதல்வராக கனவு காண்கிறேன் என்று கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன், மற்ற எந்த கட்சிகளுக்கும் இல்லாத தடைகளை விதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.
தவெக தொண்டர்களுக்கு, மாநாட்டில் நான் ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூறினேன். அதையேதான் நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். இந்த மண் பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண். சமய நல்லிணக்கத்தைப் பேணும் சமூகநீதிக்கான மண். இதை நாம் பாதுகாத்தே தீர வேண்டும். தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது மன உளைச்சலையும், மன வேதனையையும் தருகிறது. சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு எல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரி கவர்மென்ட்தான் காரணம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும்.
அதற்கு என்ன வழி? தவெக தொண்டர்கள் தினமும் மக்களைச் சென்று பாருங்கள் அவர்களுடன் பேசுங்கள். ஒவ்வொரு தெரு, வீட்டுக்குச் சென்று அவர்களின் பிரச்சினை என்னவென்று கேளுங்கள், அதை தீர்ப்பதற்கு என்ன வழியென்று யோசியுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு நம் மீது ஒரு நம்பிக்கை வரும். அப்படி ஒரு ஆழமான நம்பிக்கையை விதைத்துவிட்டு, அதற்குபிறகு நிமிர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும், தவெகவின் இரட்டைப் போர் யானை, வாகை மலர்க்கொடி தானாக பறக்கும்.
தமிழகத்தின் மன்னராட்சி முதல்வரே, உங்களுடைய ஆட்சியைப் பற்றிக் கேள்வி கேட்டால் மட்டும் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால், பெண்கள் பாதுகாப்பு சரியாக இருந்திருக்கும். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். பச்சிளம் குழந்தைகள், படிக்கும் குழந்தைகள், வீட்டில் இருக்கும் சின்ன பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என்று இவர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளைச் சொல்ல முடியவில்லை. இதில் உங்களை அப்பா என்று அழைப்பதாக சொல்கிறீர்கள்.
இங்கு நீங்கள்தான் இப்படி என்றால், அங்கு உங்களது சீக்ரெட் ஓனர், அவர்கள் உங்களுக்கும் மேலே. பிரதமர் மோடி அவர்களே, என்னமோ உங்களது பெயர்களை எல்லாம் சொல்வதற்கு எங்களுக்கு எல்லாம் ஏதோ பயம் என்று சிலர் கூறுகின்றனர். மத்தியில் ஆள்பவர்கள் என்று சொல்கிறோம். மத்தியில் ஆட்சியில் இருப்பது யார் காங்கிரஸா? மாநிலத்தில் ஆள்பவர்கள் என்று பேசுகிறோம். இங்கு ஆள்பவர்கள் யார் அதிமுகவா? பிறகு என்ன பெயர் சொல்ல வேண்டும் என்று கூறுவது? எனக்கு ஒன்றும் புரியவில்லையே.
வாக்குக்காக காங்கிரஸ் உடன் தேர்தல் கூட்டணி. கொள்ளை அடிப்பதற்காக பாஜக உடன் மறைமுக அரசியல் கூட்டணி. இப்படி உங்களது பெயரைச் சொல்லியே மக்களை ஏமாற்றுவதும், உங்களது பெயரைச் சொல்லியே மக்களை பயமுறுத்துவதும், இப்படி இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும். பாஜக அரசுக்கு ஏன் ஜி? தமிழ்நாடு தமிழர்கள் என்றாலே அலர்ஜி?
தமிழகத்தில் வரும் ஜிஎஸ்டி-யை சரியாக வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் தமிழகத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யமாட்டேன் என்கிறீர்கள். தமிழக குழந்தைகளின் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கிறீர்கள். ஆனால் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கிறீர்கள். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகளிலும் கை வைக்கப் பார்க்கிறீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்கள் தொடங்கும்போதே உங்கள் திட்டம் என்னவென்று புரிந்துவிட்டது பிரதமர் சார்.
எங்கு, எப்படி எந்த திசையில் எல்லாம் இந்த நாட்டைக் கொண்டு செல்லலாம் என்பது. உங்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது, தமிழகத்தைக் கொஞ்சம் கவனமாக கையாளுங்கள். காரணம், தமிழகம் பல பேருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம். பார்த்துக் கொள்ளுங்கள், பார்த்து செய்யுங்கள்.
இந்த பொதுக்குழு வழியாக, தமிழக மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கப் போகிறோம்.தவெக ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி. தவெக தலைமையில் அருதிப்பெரும்பான்மை பெற்ற ஆட்சி.அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சி. அப்படியாக இந்த ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை முறையாக கண்டிப்பாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவத்தில் கவனம் செலுத்துவோம். அதுவும், அனைவருக்கும் எளிதாக, சமமாக கிடைப்பதை உறுதி செய்வதுதான் தவெகவின் இலக்கு. 2026-ல் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. இவ்வாறு அவர் பேசினார்.