காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லை: எடப்பாடி பழனிசாமி!

காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லை. காவலர் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் முத்துக்குமார் என்ற காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லாத மாடல் தான் ஸ்டாலின் மாடல். மக்களுக்கும், மக்களைக் காக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சி என்பது செயலற்ற வெறும் பொம்மை ஆட்சியே!

தங்கள் பணிகளை செய்யும் காவல்துறையினரின் பாதுகாப்பு பறிபோவதற்கு காவல்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சினிமா வசனம் மற்றும் வெட்டி பேச்சு பேசும் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சரும் முழு பொறுப்பேற்க வேண்டும்!

இந்தியாவை காக்கப் போகிறேன் என்று நாள்தோறும் நீங்கள் (மு.க.ஸ்டாலின்) செய்யும் அரசியல் ஸ்டண்ட்களை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, முதலில் உங்கள் அதிகார வரம்பில் இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள்!

காவலர் முத்துக்குமார் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் , உரிய நிதி உதவியும் வழங்கிட ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.