“பட்டியல், பழங்குடியினர் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஆண்டை விட இந்தாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 விழுக்காடு குறைந்துள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 29) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது முதல்வர் பேசியதாவது:-
அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஆண்டை விட இந்தாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 விழுக்காடு குறைந்துள்ளது. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 2021-ல் 445-லிருந்து 2024-ல் 368 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது 19 விழுக்காடு குறைவாகும்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்படும் தீருதவித் தொகை, 8 லட்சம் ரூபாயிலிருந்து 12 லட்சம் ரூபாயாக மாநில அரசின் நிதியிலிருந்து கடந்த 2022-ம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 421 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளும், 649 பேர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளன. தீருதவித் தொகையாக 207.26 கோடி ரூபாய் 17,098 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில், ஒரு புதிய முயற்சியாக, வன்கொடுமைகள் குறித்த புகாரினைத் தெரிவித்தல், வழக்கு பதிவு செய்ய உதவுதல், வழக்கின் தற்போதைய நிலையினை அறிதல், தீருதவிகள் வழங்குதல் மற்றும் சட்ட ஆலோசனை வழங்குவதற்கு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் துவக்கப்பட்டு தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அவர்களது சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், தன்னாட்சி அதிகாரத்துடன் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் தலைமையில் செயல்படுகிறது. இதுவரை இந்த ஆணையத்திற்கு வரப்பெற்ற 5,191 மனுக்களில், 4,038 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கென அவர்களது மக்கள்தொகை சதவிகிதத்திற்கு ஏற்ப வழங்கப்படும் நிதியை முழுவதுமாக பயன்படுத்துவதை உறுதி செய்திட, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட சட்டம், 2024 மற்றும் அதற்கான விதிகள் இயற்றப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் பொதுப்பிரிவினரின் கல்வியறிவு 80.09 விழுக்காட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு 73.26 விழுக்காட்டிலும் உள்ளது. கல்வி அறிவை உயர்த்தும் பொருட்டு இந்தத் துறையின் மொத்த நிதி ஒதுக்கீடு 3 ஆயிரத்து 924 கோடி ரூபாயில், கல்வி சார்ந்த திட்டங்களுக்காக மட்டும் 2 ஆயிரத்து 798 கோடி ரூபாயில், அதாவது சுமார் 71.31 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வி பெறும் திட்டத்திற்கான வருமான உச்சவரம்பை 2023-ஆம் ஆண்டு முதல் இரண்டு அடுக்குகளைக் கொண்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.முதல் அடுக்கில், எட்டு லட்சம் ரூபாய்க்கு குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணாக்கர்களுக்கு ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய் வரையும், இரண்டாவது அடுக்கில், 8 லட்சம் ரூபாய்க்கு மேல், 12 லட்சம் ரூபாய்க்கு குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணாக்கர்களுக்கு ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை மத்திய அரசு வழங்கும் உதவித்தொகைக்கு இணையாக மாநில அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் எளிதாக கல்வி பெறுவதற்கு அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் கூடிய 328 உண்டி உறைவிட பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், தனிநபர் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இதில் எது குறைவானதோ அந்தத் தொகை முன்விடுவிப்பு மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், வங்கியில் கடன் தவணை தொகையினை தவறாமல், திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு 6 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டாண்டுகளில், இந்தத் திட்டத்தின்கீழ் 468 பயனாளிகளுக்கு 89 கோடியே 71 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
‘நன்னிலம்’ எனும் ஆதிதிராவிடர் மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 625 பயனாளிகளுக்கு 30 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, மகளிரை நில உடைமையாளராக இந்த அரசு மாற்றியுள்ளது. தாட்கோ மூலம் வழங்கப்படும் மானியத்தை 2023-ஆம் ஆண்டு முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, நடப்பாண்டில் 140 பயனாளிகளுக்கு 8 கோடியே 25 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தில், 2023–2024-ஆம் நிதியாண்டில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரக மற்றும் நகராட்சித் பகுதிகளில் 1,690 உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் செய்து முடிக்கப்பட்டன. 2024-2025-ஆம் நிதியாண்டில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,966 பணிகள் எடுக்கப்பட்டு முடிக்கும் தருவாயில் உள்ளன. இந்த ஆண்டு, இந்த திட்டத்திற்காக 280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 2066 தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியமாக 243 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 400 மகளிர் தொழில்முனைவோர் 41 கோடியே 87 லட்சம் ரூபாய் மானியமாக பெற்றுள்ளனர்.
TN-BEAT என்னும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் முனைவோர் சிறப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் நடத்தப்பட்டது. இதில், 375 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு, பல்வேறு தொழில் மற்றும் வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்கான இத்திட்டத்தினை தொடர்ந்து மேற்கொள்ளும் உறுதியுடன் இந்த அரசு உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இக்கூட்டத்தில்,அமைச்சர்கள் கோவி.செழியன், சி.வி. கணேசன், மா. மதிவேந்தன், என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், ஜி. செல்வம், தொல். திருமாவளவன், ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், துறைச் செயலாளர்கள், அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.