துரோகத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மதுரை அவனியாபுரத்தில் இன்று சனிக்கிழமை டிடிவி. தினகரன் கூறியதாவது:-
நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே இருக்கிறோம். திமுக என்கிற தீய சக்தி ஆட்சியில் நீடிக்கக் கூடாது. திமுகவுக்கு எதிராக மாற்று சக்திதான் தேசிய ஜனநாயகக் கூட்டணி. திமுக வெற்றி பெறக் கூடாது என நினைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் எந்த கட்சியும் வரலாம்.
விஜய் அவருடைய ஆசையை சொல்லி இருக்கிறார். உண்மையான மாற்றாக மக்கள் மனதில் இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். சுயநலத்தால், பதவி வெறியால் திமுக மீது உள்ள பயத்தால், தங்கள் மீது வழக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக திமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மறைமுகமாக சிலர் உதவி வருகிறார்கள்.
துரோகத்தின் முழு வடிவமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தைவிட பாஜக ஆட்சிக்காலத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்கள் நம்பிக்கையை அரசு இழந்துள்ளது. அதனை மறைப்பதற்காக திமுகவினர், மத்திய அரசின் மீது பழி போடுகிறார்கள். கருத்துக் கணிப்பு என்பதெல்லாம் பொய். மக்கள் கணிப்பு தான் வெற்றி பெறும். துரோகத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர். இவ்வாறு அவர் கூறினார்.