காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. தொண்டரை தாக்கியது தொடர்பான புகாரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சாலை மறியல், நில அபகரிப்பு புகார் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமார், 3 மாதங்களுக்கு பிற்கு ஜாமீனில் இருந்து வெளியே வந்தார்.
இதனிடையே, கைது நடவடிக்கையின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார், அவரது மகன் ஜெயவர்தன் ஆகியோர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், ஜெயக்குமார் தரப்பு புகாரை முடித்து வைத்து 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜெயக்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஜெயக்குமார் அளித்த புகாரை காவல் துறை அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன்? என மாநில மனித உரிமை ஆணையத்திற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயக்குமார் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக அவர் பொய் புகார் அளித்துள்ளார் எனவும் வாதிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நீதிபதி கே.ராஜசேகர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவல்துறைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்காமல் முடித்து வைத்தது தவறு என்று குறிப்பிட்டு, மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். ஜெயக்குமார் அளித்த புகாரை மீண்டும் விசாரிக்க மாநில மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.