முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மாநில கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த விடுதலை சிறுத்தைகைள் கட்சித் தலைவர் திருமாவளவன், மேனாள் நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக தொடர் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் இந்த சந்திப்பின்போது ஏதேனும் பேசப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது:-
தலித் மக்கள் மீதான வன்கொடுமைக்கான தீர்வு குறித்து நீதி அரசர் சந்துரு தலைமையிலான குழு ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறோம். இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள் கருத்துக்களை எடுத்து முன் வைத்தோம். முதல்வரின் கவனத்திற்கு முன் வைத்தோம். தலைமை உரை ஆற்றிய முதல்வர், தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு முயற்சிகள் குறித்தும் திட்டங்கள் வெற்றிகரமாக நடைபெறுவது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி சைதாப்பேட்டையில் கட்டி முடிக்கப்பட்ட 10 தளங்கள் கொண்ட மாணவர் விடுதி ஒன்றை அவர் திறந்து வைக்க உள்ளார். எம்.சி ராஜா என பெயரிடப்பட்டிருக்கும் மாணவர் விடுதி, 10 தளங்களைக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 500 மாணவர்கள் தங்குவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்ட இது, புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி அன்று திறக்கப்பட இருக்கிற செய்தியை அறிவித்தார்.
அதேபோல அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்நிலை இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அரசமைப்புச் சட்டம் 16 4 விதியின்படி புதிய சட்டம் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்பதையும் உறுதி அளித்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படுகிற வன்கொடுமைகளில் பாதிக்கப்படுகிற மக்கள் மீது வழக்கு பதிவு செய்யும் போக்கு தொடர்கிறது. அதில் அதிகாரிகள் செயல்படும் போக்கு என்பது கவலை அளிப்பதாக இருக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டி முதல்வரின் கவனத்திற்கு அதை கொண்டு சென்றிருக்கிறோம்.
அதே போல தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிற அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு 170 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றாலும் கூட அதை ஆண்டுக்கு 500 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கூறியிருக்கிறோம். அயோத்திதாசர் பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கிற குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு போதிய அளவில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி அதை 200 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம். இவை அன்றி கேரள பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் இருக்கை அமைப்பதற்கு ஏற்கனவே முதல்வர் தமிழ்நாடு அரசின் சார்பிலே ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார். அந்த நிதி போதாது என்கிற சூழலில் இரண்டரை கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கி இருக்கிறோம்.
பெரியவர் இளையவருமாள் பெயரில் சிதம்பரம் தொகுதியில், சிதம்பரம் அருகே 5.70 கோடி மதிப்பேட்டில் அவருடைய நூற்றாண்டு நினைவரங்கம் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. அது தொடர்பாக இன்றைக்கு அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் நேரில் வந்து முதல்வரை சந்தித்து நன்றி கூறியிருக்கிறார்கள். விரைவில் அந்த நினைவு மண்டபம் முதல்வர் அவர்களின் தலைமையில் திறக்கப்படும் என்று நம்புகிறோம். வன்கொடுமைகள் வட இந்திய மாநிலங்களில் நடைபெறும் கண்கொடுமைகளை போல குறிப்பாக உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெறும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை போல தமிழகத்தில் தென்மாவட்டங்களில் அதிகரித்து வருவதை பலரும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் அவற்றை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.