தமிழ்நாட்டில் 60% மக்கள் தங்கள் வீடுகளில் முன்மொழிக் கொள்கைதான் பேசி வருகின்றனர். தமிழகத்திற்கும் மும்மொழிதான் பலனளிக்கும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் பட்டியல் சமூகத்தினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, தமிழக அரசையும், காவல்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
கடந்த ஒன்றை மாதத்திற்கு முன்பு திண்டுக்கல் அருகே உள்ள மாங்கரை கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினரை 20 பேர் கொண்ட ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு அனுமதியுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதேபோல் கரட்டழகன் பட்டியை சேர்ந்த பள்ளி மாணவன் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுபோன்று தேவேந்திர குல வேளாளர் ஆதி திராவிடர் மற்றும் சிறுபான்மை இன மக்கள் மாவட்டத்தில் தாக்குதலால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இச்சம்பவங்கள் அப்பகுதியில் அரசியல் மற்றும் காவல் துறையினால் மூடி மறைக்கப்படுகிறது. காவல் துறையினர் பாகுபாடு பார்க்காமல் நடக்க வேண்டும். திமுக துண்டு வேஷ்டி கட்டாத திமுகவினர் போல் நடக்கக் கூடாது.
பொதுவாக தென் மாவட்டங்களில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. திண்டுக்கல் மாவட்டமாகி பல்லாண்டுகள் ஆகி எந்தவிதமான தொழிற்சாலைகளும் வரவில்லை. முக்கியமாக தொழிற்சாலைகள் வரவேண்டும். ஆளுங்கட்சியினை விமர்சனம் செய்த சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை கொட்டியது என்ன நியாயம். சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டான, துப்புரவு பணியாளருக்கு வழங்கப்பட்ட 50 லட்சம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எதுவும் அவர்கள் பெயரில் இல்லை. மேலும் தமிழகத்தில் வழங்கக்கூடிய எஸ்சி எஸ்டி மக்களுக்கான நிதி முழுமையாக அவர்களுக்கு சேராமல் ஒரு சில கட்சிகள் அபகரித்துக் கொள்கின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் குறிப்பாக தாட்கோ மூலம் வழங்கப்படும் நிதியில் முறைகேடு நடைபெற்று உள்ளது. அது குறித்து வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும். மேலும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். ஒரு சமுதாயத்திற்கு மட்டுமே 500 கோடி ரூபாய் எப்படி வழங்கப்பட்டது. பட்டியல் இனத்தில் 76 சமுதாயத்தினர் உள்ளனர். இதில் ஒரு சமுதாயத்திற்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கியது குறித்து முழுமையான விசாரணை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் 60% பேர் தங்களது வீடுகளில் மும்மொழி தான் பேசுகின்றனர். தெலுங்கு கன்னடம் ஆகிய மொழியில் தான் பெரும்பாலும் பேசி வருகின்றனர். பல பள்ளிகளில் மும்மொழி தான் நடத்தப்படுகின்றது. தமிழ்நாட்டுக்கு மூன்று மொழி தான் பலனளிக்கும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்படும் தாக்குதல்களுக்கு உள்ளூர் அரசியல் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பேசி வெளிவிடாமல் தடுத்து வருகின்றனர். திமுக ஆட்சி காலத்தில் பட்டியலின மக்களுக்கு நடைபெறும் தாக்குதல்களில் காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு துணை போகக்கூடாது. அரசியல் ரீதியாக செயல்படக்கூடாது நேர்மையாக செயல்பட வேண்டும்.
வரும் 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் பகிர்வு என்பதுதான் எங்கள் கொள்கை. திமுகவை மாற்றுவதற்காக கூட்டணி என்பதை விட ஆட்சியில் பகிர்வு என்ற கூட்டணி தான் அமைய வேண்டும். தமிழகத்தில், புதிய தமிழகம் கட்சி கூட்டணி பகிர்வு ஆட்சிக்கான முன்னெடுப்பை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.