உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரியான பொன்வண்ணன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் 2 நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திய போது காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை கூறிய போது காவலரை கொலை செய்தனர். இந்த சம்பவத்தின் போது முத்துக்குமார் உடனிருந்த உறவினர் ராஜாராமும் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து காயம் காரணமாக ராஜாராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதேபோல் காவலர் முத்துக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை காவலர் முத்துக்குமாரின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்பின் இன்று காலை பேச்சுவார்த்தைக்கு பின் முத்துக்குமாரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இதன்பின் 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கஞ்சா வியாபாரியான பொன்வண்ணன் தேடப்பட்டு வந்தார். இவர் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கஞ்சா வியாபாரியான பொன்வண்ணனை போலீசார் ரவுண்ட் அப் செய்துள்ளனர். ஆனால் பொன்வண்ணன் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனால் காவல்துறையினர் கஞ்சா வியாபாரியான பொன்வண்ணனை சுட்டதில், அங்கேயே பலியாகி இருக்கிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.