நாளை வழக்கம்போல் வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

நாளை ரம்ஜான் தினத்தில் அனைத்து வங்கிகளுக்கும் செயல்பட வேண்டும். வங்கிகளுக்கு விடுமுறை என்பது கிடையாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜானையொட்டி இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பாரகள். அதன்படி தற்போதைய ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இஸ்லாமியர்கள் உணவு உண்ணாமல் நோன்பு கடைப்பிடிக்கின்றனர். அதன்பிறகு மாலையில் இஃப்தார் விருந்துடன் நோன்பை முடித்து கொள்வார்கள். பொதுவாக ரம்ஜான் நோன்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை என்பது வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படும். அதன்படி தமிழகத்தில் மார்ச் 2 (ஞாயிற்றுக்கிழமை) முதல் ரமலான் நோன்பு என்பது தொடங்கியது. பொதுவாக 28 அல்லது 29 நாட்கள் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும். அதன்பிறகு பிறை பார்க்கப்பட்டு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி இன்று பிறை பார்க்கப்படும். வானில் பிறை தெரிந்தால் அதனடிப்படையில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும். இல்லாவிட்டாலும் இஸ்லாமிய காலண்டரின் அடிப்படையில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

பொதுவாக ரம்ஜானையொட்டிஅனைத்து வங்கிகளுக்கு அரசு விடுமுறை விடப்படும். அதன்படி இந்த ஆண்டும் ரம்ஜானுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் நாளைய தினம் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ள நிலையில் அந்த விடுமுறையை ரத்து செய்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி நேற்று சனிக்கிழமை. இன்று ஞாயிற்றுக்கிழமை. இரண்டு நாட்கள் ஏற்கனவே விடுமுறை தினமாகும். நாளை விடுமுறை என்றால் 3வது நாளும் விடுப்பு வந்துவிடும். தொடர்ந்து 3 நாள் வங்கி விடுமுறை என்பதில் பிரச்சனை இல்லை. ஆனால் நாளையுடன் 2024-25ம் நிதி ஆண்டு முடிவுக்கு வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இதனால் 2024-25ம் நிதியாண்டு கணக்குகளை முடிக்க வேண்டும். இதனை கணக்கில் கொண்டு தான் நாளை தினம் வங்கிகள் செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛அனைத்து வங்கிகள் மற்றும் அரசாங்க வருவாய் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் கிளைகள் மார்ச் 31ஆம் தேதி வழக்கமான பணிநேரத்தில் பணியாற்ற வேண்டும். அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும். மார்ச் 31ம் தேதியிட்ட காசோலைகளையும் கிளியர் செய்ய வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.