நடிகர் விஜய் ஆயிரம் கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இதனை சுட்டிக்காட்டியுள்ள சபாநாயகர் அப்பாவு, வருமான வரித்துறை முதலில் விஜய் வீட்டுக்குதான் ரெய்டுக்கு போக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசிய விஷயங்கள் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அவர் பேசுகையில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அண்ணாமலையை செட் செய்து வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் தலையாட்டுகிறது. எங்களை எல்லோரும் ஒர்க் பிரம் ஹோம் அரசியல் செய்கிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள்.. ஆனால் எங்கள் அரசியல் எங்கள் விமர்சகர்களை வீட்டுக்கு அனுப்பும் அதிரடி அரசியலாகும். தமிழக வெற்றி கழகத்தில் சாதி இருப்பதாக விமர்சனங்கள் எழுகிறது. உண்மையில் தமிழ்நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக சாதியை வளர்த்தது யார்? இது எல்லோருக்கும் தெரியும். எம்.ஜி.ஆரும் இதே கழகத்தில் தான் வேலை பார்த்துவிட்டு 20 ஆண்டுகள் கழித்து உண்மை தெரிந்த பின் வெளியே வந்துவிட்டார். திமுகவால் அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற முடியவில்லை பெரியாரின் கொள்கைகளையும் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் பெரியார் அண்ணா என இருவரின் கொள்கைகளையும் நிறைவேற்றவும் ஒரே தலைவர் எங்கள் தலைவர் தான். நாங்கள் போராட்டக் களத்திற்கு வரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்.. இரண்டு மாத காலம் காத்திருங்கள் எங்களின் போராட்டம் எந்த அளவுக்கு வீரியமானது என்று உங்களுக்கு தெரியும்.
திமுக கூட்டணியில் இருந்த வைகோவை எப்படி காலி செய்தார்கள் என்று தெரியுமா? வெறும் ஆறு தொகுதிகளை கொடுத்துவிட்டு திமுக தனது சின்னத்தில் நிற்க வைத்தது. இன்றைக்கு மதிமுகவுக்கு என தனி எம்எல்ஏக்கள் கிடையாது. எங்கள் தலைவர் ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர். அவர் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வருவரா?” என்று ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
இதற்கு பதில் கேள்வி எழுப்பியுள்ள சபாநாயகர் அப்பாவு, “ஆயிரம் கோடி சம்பளம் என ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். அப்படியெனில் த.வெ.க. தலைவர் விஜய் வீட்டீல் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.