2வது இடத்தில் யார் என்பது தான் விஜய்க்கும், எடப்பாடிக்கும் போட்டி: திருமாவளவன்!

‛‛2வது இடத்தில் யார் என்பது தான் விஜய்க்கும், எடப்பாடிக்கும் போட்டி. வார்டு எலக்ஷனில் கூட நிற்காத தவெக கட்சி 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது. நீங்கள் 2 பேரும் சண்டை போட்டு கொள்ளுங்கள்” என்று விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து விஜய் அரசியல் பயணத்தை முன்னெடுத்துள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் தவெகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய், ‛‛தமிழகத்தில் போட்டி என்பது திமுக – தவெக இடையே தான்” என்று பரபரப்பாக பேசினார். தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு எம்எல்ஏக்கள் உள்ளனர். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கான ஓட்டு சதவீதம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படியான சூழலில் கடந்த ஆண்டு கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தமிழக அரசியலில் திமுக – தவெக இடையே தான் போட்டி என்று கூறியுள்ளார். விஜயின் இந்த பேச்சுக்கு திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது நடிகர் விஜயின் பேச்சை கடுமைாக விமர்சனம் செய்தார். அதோடு தவெகவை கிண்டல் செய்தார். இதுதொடர்பாக திருமாவளவன் பேசியதாவது:-

ஏதோ தனியார் நிறுவனம் சர்வே நடத்தினார்களாம். அதில் 2ம் இடம் வந்து விட்டார்களாம். அடுத்து அவர் (விஜய்) தான் ஆட்சியை பிடிக்க போகிறாராம். பாவம் அவரை உசுப்பிவிடுறாங்க. வேண்டும் என்றே. அவருக்கு ஆசையை தூண்டிவிட்டு உள்ளே வந்து களமிறங்கி விளையாடுங்க என்று சொல்கின்றனர்.

2026 சட்டசபை தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி. ஒரு பக்கம் திமுக. இன்னொரு பக்கம் தவெக. அதில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நீங்கள் போட்டியில்லை. உங்களை விட நாங்கள் தான் பெரிய சக்தி என்று கூறுகிறார். போட்டி என்பது திமுகவுடன் இப்போது கிடையாது. 2வது இடத்தில் யார் என்பது தான் விஜய்க்கும், எடப்பாடிக்கும் போட்டி. 2வது இடம் யாருக்கு என்பதில் தான் அண்ணாமலைக்கும், விஜய்க்கும் போட்டி. இந்த தமிழக அரசியல் களத்தில் 2வது இடம் பிடிப்பது யார்? என்பதில் சண்டை நடக்கிறது. அந்த சண்டை எடப்பாடி பழனிச்சாமிக்கும், விஜய்க்கும் இடையே நடக்கிறது. திமுக கூட்டணியுடன் அவர்கள் மோத முடியாது. அதனை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். திமுக, தவெக இடையே தான் போட்டி என்று அவர் (விஜய்) யாருக்கு பதில் சொல்கிறார். அது திமுகவுக்கு சொல்கிற பதிலா? கிடையாது. எங்கள் 2 பேருக்கும் தான் போட்டி என்று ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவுக்கு விடுக்கிற சவால்.

அதிமுகவுக்கு ஒரு நெருக்கடியை தருகிறார். நீயா? நானா? 2வது இடம். அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தான் முதன்மையாக இருக்கிறது. அதனை எதிர்க்கும் வலு அதிமுக, பாஜகவுக்கு இல்லை. அதனை எதிர்க்கும் வலு எங்களுக்கு தான் இருக்கிறது என்று வார்டு எலக்ஷனில் கூட நிற்காத கட்சி, 62 எம்எல்ஏக்களை வைத்து இருக்கும் அதிமுகவுக்கு சவால் விடுகிறது. நீங்கள் 2 பேரும் சண்டை போட்டு கொள்ளுங்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மை தான். ஆனால் ஒரு உண்மையை மறந்து விடக்கூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து உருவாக்கிய மதசார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.