மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்: ராஜ்நாத் சிங்!

மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், பெண் சுதந்திர போராட்ட வீராங்கனைகளை வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் வகையில் டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, ஒடிசா துணை முதல்-மந்திரி பிரவதி பரிதா, ராஜஸ்தான் துணை முதல்-மந்திரி திவ்யா குமாரி ஆகியோரும் பங்கேற்றனர். மேலும் பா.ஜனதா அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் நடிகை நமீதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

நாட்டில் ஜான்சி ராணியை அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே ஆங்கிலேயர்களை எதிர்த்த வீராங்கனை வேலு நாச்சியார் ஆவார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில், ராணிவேலு நாச்சியாரின் வாழ்க்கை, பொற்காலமாக உள்ளது. தைரியத்திற்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய முதல் அரசி ஆவார். ராணிவேலுநாச்சியார், மக்களுக்கு ஆதரவான ஆட்சியாளர் ஆக இருந்தார். அத்துடன், உண்மையான தலைமைத்துவம் என்பது, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதில் இல்லை. அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிராக போராடுவதில் உள்ளது என்பதை தனது தைரியம் மற்றும் தலைமைப் பண்பு மூலம் நிரூபித்தார்.

தமிழகத்தில், ராணி வேலு நாச்சியாருடன், ராணி மங்கம்மாளும் சிறந்த பெண் ஆட்சியாளராக இருந்தார். அவர் தனது ஆட்சியை காத்ததுடன், ஏராளமான மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வந்தார்.அவர் உள்கட்டமைப்பு திட்டத்தில் ஏராளமான முதலீடு செய்தார். சாலைகள் அமைப்பதிலும் , மக்களுக்கு சுத்தமான குடிநீர்வழங்குவதிலும் கவனம் செலுத்தினார். நெடுஞ்சாலை கட்டமைத்த பெருமை அவருக்கு உள்ளது. அதைப்போல அவரது படையில் இருந்த குயிலியையும் நான் நினைவுகூர்கிறேன்.

பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மகாத்மா காந்தி ஊக்கமளித்தார். இதனால், சரோஜினி நாயுடு உள்ளிட்ட ஏராளமான பெண்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பெண்கள் பங்கேற்பு காரணமாக சுதந்திர போராட்டம் மாபெரும் இயக்கமாக மாறியது. நாட்டின் வரலாற்றை பார்த்தால், பெண்கள் பொது வாழ்க்கையில் பங்கேற்கும் போது, புதிய இந்தியா உருவாகிறது.

பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். மோடி பிரதமரான பிறகுதான் அது நடக்கிறது. நாங்கள் இந்தி மொழிக்கு மட்டும் அல்ல, அனைத்து மொழிகளுக்கும் மரியாதை தருகிறோம். சிலர் இந்தி மற்றும் தமிழ் மொழிகள் தொடர்பாக சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர். இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளின் பெருமையை பாதுகாக்க பா.ஜ.க. பணியாற்றி வருகிறது. காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்தி உள்ளிட்ட எந்தவொரு இந்திய மொழிகளும் ஒன்றுக்கு ஒன்று போட்டி அல்ல. அவற்றுக்கு இடையே ஒற்றுமை உள்ளது. அனைத்து இந்திய மொழிகளையும் இந்தி பலப்படுத்துகிறது. அனைத்து இந்திய மொழிகளில் இருந்து இந்தி பலன்பெறுகிறது. மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். பிற மொழிகளை நசுக்க நினைக்கவில்லை. இந்தி மூலம் இணைப்பையே ஏற்படுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.