எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு தயாராகாவிட்டால் திமுகவை தோற்கடிக்கவே முடியாது: டாக்டர் கிருஷ்ணசாமி!

எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு தயாராகாவிட்டால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கணக்குகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. ஒருபக்கம், பாஜக – அதிமுக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே இதனை உறுதிப் படுத்தியுள்ளார். இன்னொரு புறம் தவெக தலைவர் விஜய், 2026ல் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி எனச் சூளுரைத்துள்ளார். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரும் நிலையில், எப்படியான கூட்டணிகள் அமையப் போகின்றன என்பதை அறிய அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கூட்டணி தொடர்பாக முக்கியமான விஷயத்தைக் கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. புதுக்கோட்டையில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணசாமி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமையும் என்பதில், திமுக கூட்டணி அல்லாத பிற கட்சிகளிடையே தற்போது வரை தெளிவற்ற நிலையே இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுகவில் ஏழு, எட்டு கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மற்ற எதிர்க்கட்சிகள் முடிவான நிலையை எடுக்கவில்லை. ஒற்றைக் கட்சி ஆட்சி அல்லாமல், கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான காலம் கனிந்து வருகிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால், மற்ற கட்சிகள் எல்லாம் தங்களுக்குள் உள்ள ஈகோவை விட்டுவிட்டு ஒன்றிணைய வேண்டும். கூட்டணி ஆட்சிக்கு யாரும் தயாராகவில்லை என்றால், திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது. திமுகவை ஆட்சியில் அமர்த்த மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். Rec

யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பதெல்லாம் தற்போது சொல்ல முடியாது. யார் தலைமையில் வேண்டுமென்றாலும் அமையலாம்.. ஏன் புதிய தமிழகம் கட்சி தலைமையில் அமைய கூட வாய்ப்பு இருக்கிறது. தலைமை யார் என்பதை எல்லாம் விட்டுவிட்டு சுய கௌரவத்தை விட்டுவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு எதிரணிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சேருமா, சேராதா என்பதை தற்போது உள்ள சில நகர்வுகளை வைத்து கூறிவிட முடியாது. தேர்தல் சமயத்தில்தான் அணிகள் உருவாகும்.

தங்களின் கட்சியை வலுப்படுத்திக் கொள்வதற்காக நடிகர் விஜய் பேசி வருகிறார். திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தான் 2026 இல் போட்டி இருக்கும் என்று கூறும் விஜய் அவர் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கவில்லை, கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்க்கவில்லை, முஸ்லிம் லீக்கை எதிர்க்கவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களை வலுப்படுத்திக்கொள்ள இப்படித்தான் இருக்க முடியும். விஜய் தற்போது தான் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். தனது கட்சியை முன்னிலை படுத்த வேண்டும் என்பதற்காக பேசுகிறார். அது அவரது கட்சியை நிலைப்பாடு ஆனால் அதுவே சரியாக வருமா அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை தற்போது சொல்ல முடியாது. அதற்குண்டான காலகட்டம் சூழல் எப்படி வருகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க முடியும்.

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது அனைவரும் எடுத்த முடிவுதான். தனித்தனியாக நிற்பதாக எந்த அரசியல் கட்சியும் சொல்லவில்லை. அனைவருமே ஒரு சூழ்நிலை வருகின்ற வரை தனியாக நிற்கிறேன் எனத்தான் கூறி வருவார்கள். ஆனால் 2026 இல் அனைவருமே தனித்தனியாக இருக்கும் மேகங்கள் எல்லாம் ஒரு சூழ்நிலையில் ஒன்று சேர்வதைப் போல திமுகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேருவார்கள். இது சாத்தியமாக வேண்டும்.

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அதிமுக, திமுக ஆட்சிகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ரூ.1,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்று அமலாக்கத் துறை கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள 19 மதுபான ஆலைகளில் தயாரிக்கப்படும் மதுபானங்களில் 50 சதவீதத்துக்கு மட்டுமே அரசுக்கு வரி செலுத்தப்படுகிறது. மற்றவை திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் முறையாக விசாரித்தால் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் ஊழலுக்கு வாய்ப்பு இருக்கிறது. இதை அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.