“மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சதித் திட்டங்களுக்கு தடையாக இருப்பது திமுக தான். அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள் நடத்துவார்கள்.” எனக் கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஒருபுறம் பாஜக – அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இன்னொரு புறம், பொதுக்குழுவை நடத்தி திமுகவுக்கும் – தவெக-வுக்கும் தான் போட்டி என முழங்கியுள்ளார் முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் விஜய். தமிழக அரசியல் களம் அனல் போலத் தகித்துக் கொண்டிருக்கும் நிலையில், திமுகவை வீழ்த்த பாஜக தலைமை, டிசைன் டிசைனாக எதிரிகளை உருவாக்குவார்கள் என கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்று, கழக நிர்வாகிகளை வாழ்த்தினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஆல் போல் தழைத்து, தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் முன்னேற்றிட அல்லும் பகலும் உழைத்து, வேல் போல் பாய்ந்து எதிரிகள் படையைத் தோற்கடித்திடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள், பேரறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞரும் வளர்த்தெடுத்த எனதருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுகள்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த சமயம் உங்களிடம் நான் தொலைபேசியில் பேசும்போதே, தேர்தல் முடிந்தவுடனே உங்களை எல்லாம் சந்திக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமியிடம் பாக முகவர்களை அறிவாலயத்துக்கு அழைத்து வரச் சொல்லியிருந்தேன். அவரோ, “பாக முகவர்களோடு என்னுடன் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் இந்த வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். அதனால் கூட்டம் ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லி லேட்டாக இருந்தாலும் மிக பிரம்மாண்டமாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் செயல்வீரர் முத்துசாமி. அவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!
தேர்தலைப் பொறுத்தவரை வரலாறு காணாத வெற்றியையும் நாம் பார்த்திருக்கிறோம்! மிக மோசமான தோல்வியையும் சந்தித்திருக்கிறோம். பெற்ற வெற்றிகளால் நாம் தலைக்கனமும் கொண்டதில்லை; அடைந்த தோல்விகளால் சோர்வடைந்து முடங்கியதுமில்லை! ஒவ்வொரு முறையும் எழுச்சி பெற்று, முன்பை விட வீரியமாகக் கழகம் செயல்படுவதற்கு அடிப்படையாக இருப்பது உங்களைப் போன்ற உடன்பிறப்புகள்தான்! அதனால்தான், நான் தலைவராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு சந்தித்த 2018 உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரையிலும் தொடர் வெற்றிகளை நாம் பெற்றிருக்கிறோம். பொதுவாகத் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறவர்களிடம், களநிலவரம் எப்படியிருக்கிறது? வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது என நான் விசாரிக்கும்போது, “இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறோம்; மூன்று மடங்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறோம்!” என்று சொல்வார்கள்.. ஆனால் உங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொருத்தவரை, கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை மூன்று மடங்கு உழைப்பைக் கொடுத்து தொடர் வெற்றியை நீங்கள் உறுதி செய்திருக்கிறீர்கள்! அதற்காக உங்களுக்குச் சிறப்பான வாழ்த்துகள், பாராட்டுகள்!
தேர்தல் பணி என்பது, கட்சிக் கூட்டம் மாதிரி கிடையாது. கடுமையான களப்பணி அது! ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு நிமிடமும், பொதுமக்களைச் சந்திக்க வேண்டும். நம்மைப் பற்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான மதிப்பீட்டை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் நம் கொள்கைகள் – திட்டங்கள் – சாதனைகளை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு ஏதாவது குறைகள் – கோபம் இருந்தால் அதற்குத் தீர்வு காண்கிறோம் என உறுதியளித்து, அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும். அதை வாக்குகளாக மாற்ற வேண்டும். தேர்தல் நாள் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை முடிந்து, வெற்றிச் சான்றிதழை வாங்கும்வரை உணவு – தண்ணீர் – குடும்பம் – தூக்கம் என அனைத்தையும் மறந்துவிட்டுத் தவறுகள், முறைகேடுகள் எதுவும் நடக்காத அளவுக்கு விழிப்போடு பணியாற்ற வேண்டும்! அப்படி பணியாற்றி வெற்றியைத் தேடித்தந்திருக்கும் உங்களை பாராட்டுவது மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக, தலைமைத் தொண்டனாகப் பெருமை அடைகிறேன்.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்து, தமிழ் மண்ணில் பிற்போக்குத்தனங்களையும் – வெறுப்பையும் பேசும் மக்கள் விரோத சக்திகளுக்கும் – அவர்களின் கைப்பாவைகளுக்கும் இடமில்லை என இந்தத் தேர்தலில் நிரூபித்திருக்கிறோம். எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து பேசுவார்கள் இதற்காகப் பணியாற்றிய அமைச்சர்கள் சு. முத்துசாமி, கே.என். நேரு, எ.வ. வேலு, சக்கரபாணி, மு.பெ. சாமிநாதன், செந்தில் பாலாஜி, தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர், ஆர். ராஜேந்திரன் ஆகியோருக்கும், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஈரோடு வடக்கு மாவட்டச்செயலாளர் என். நல்லசிவம், ஈரோடு மத்திய மாவட்டச் செயலாளர் தோப்பு வெங்கடாசலம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம், ஆகியோருக்கும், அவர்களுக்குத் துணைநின்ற செந்தில், சுப்பிரமணி போன்ற கழக நிர்வாகிகளுக்கும், பூத் கமிட்டி உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் எனப் பாடுபட்டு உழைத்த அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் மீண்டும் மீண்டும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது நாம் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் நேரத்தில் வந்த தேர்தல். நம் ஆட்சி பற்றிய மக்களின் தீர்ப்பாகக் கருதப்பட்ட முக்கியமான தேர்தல். அதில் பெருவெற்றியைப் பெற்றுத் தந்த உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இன்னும் ஓராண்டில் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். பொதுத் தேர்தல் களத்தில் நம் எதிர்க்கட்சிகள் எல்லாம் நம்மிடம் இருந்து வெற்றியைப் பறிக்க எவ்வளவு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து போவார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவின் சதித் திட்டங்களுக்கு முதன்மைத் தடையாக இருப்பது தமிழ்நாடும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான். அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள் நடத்துவார்கள். இந்த மாதிரியான நாடகங்களை 75 ஆண்டுகளாக – ஏன், அதற்கு முன்பிருந்தே பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் நாம். அதனால், என்ன திட்டம் போட்டாலும் அதை முறியடிப்பதற்கான வலிமை நம்மிடம் உள்ளது. அந்த வலிமைதான் நீங்கள்! உங்களை மாதிரி உழைக்கும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள்! நம் மேல் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்கள்! என்னை பொறுத்தவரைக்கும், நான் கொள்கை – உழைப்பு – சாதனை ஆகியவற்றை நம்புகிறவன். அதற்கு நேர்மையாகவும் – தடம் மாறாமலும் இருப்பதால்தான் மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். அந்த மக்களைக் காக்க – இந்த தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்ற – 2026-இல் களம் காண்போம்! உங்கள் உழைப்பைக் கொடுங்கள்! வரலாறு காணாத வெற்றியைக் காண்போம்! இவ்வாறு அவர் பேசினார்.