திமுகவின் பி டீம் ஆக தவெக உள்ளது. தமிழக அரசியலை ஆழமாக கற்றுக் கொண்டு தவெக தலைவர் விஜய் பேச வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை மணப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற தனியார் மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மொழியை வைத்து மக்களை பிரிக்க வேண்டும் என பாஜக எப்போதும் நினைத்தது இல்லை. இன்னொரு மொழியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமே தவிர, பிரிக்கும் மொழியாக பயன்படுத்த கூடாது என்று பாஜக உறுதியாக இருக்கிறது. ஆனால் முதல்வரின் பிரித்தாளுகின்ற வகையில் உகாதி வாழ்த்து கூறியிருக்கிறார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என்று பொய்யான குற்றச்சாட்டுடன் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். முதல்வர் இத்தகைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் திமுக ஆதரவுடன் மிகப்பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலனை பார்க்க வேண்டுமென்றால் நான் என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு சுமூகமான நடைமுறைக்கு திமுக அரசு வர வேண்டும்.
வரும் 2026-ல் திமுக கூட்டணி பிரிந்துவிடும். செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்தது குறித்து எனக்குத் தெரியாது. திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என விஜய் எதுகை மோனையில் பேசுவது வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம். ஆனால், தவெக எதிரில் கூட இல்லை. முதலில் திமுகவுக்கு எதிரான எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும். விஜய் நடித்த படம் மற்ற மொழிகளிலும் ஓடுகிறது. படத்துக்கு பல மொழி வேண்டும். பாடத்துக்கு பல மொழி வேண்டாம் என சொல்வது எப்படி நியாயம்.
திமுக எதை செய்கிறதோ அதை தான் விஜய்யும் செய்கிறார். கொள்கை தலைவர்களாக அஞ்சலை அம்மாள், காமராஜர் உள்ளிட்டோர் இருக்கும்போது, பெயர் மட்டும் பெரியாரின் பெயரை வைக்க வேண்டும் என விஜய் சொல்கிறார். அப்படியென்றால் திமுகவுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. திமுகவின் ‘பி டீமாக’ தான் தவெக உள்ளது. தெளிவற்ற தன்மையுடன் விஜய் இருக்கிறார். மக்களின் வாழ்க்கை விரிவடைந்தால் பரந்தூர் விமான நிலையம் தேவைப்படும். இன்னும் அழுத்தமாகவும், ஆழமாகவும் தமிழக அரசியலை கற்றுக் கொண்டு விஜய் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.