கொடைக்கானல், நீலகிரியில் திங்கள் முதல் வெள்ளி வரை 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற திட்டம் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு படி, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது வரை விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா வாகனங்களுக்கும் இபாஸ் வழங்கப்பட்டு வருகின்றது.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை ஒரு நாளுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் மேலும் ஒரு கட்டுப்பாட்டை கடந்த மாதம் விதித்தது. ஐகோர்ட் உத்தரவு படி இன்று நள்ளிரவு முதல் ஜூன் இறுதி வரை சுற்றுலா வாகனங்கள் நீலகிரிக்கு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடு விதிகள் அமல்படுத்தப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்ற திட்டம் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது.
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 8,000 சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படும். ஏற்கனவே கடந்த மே 7 முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு மட்டுமே இ பாஸ் அனுமதி வழங்கப்படும். நீலகிரி பதிவெண் கொண்ட வாகனம், ஆம்புலன்ஸ், அவசரக்கால வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் நீலகிரி மாவட்ட எல்லைகளில் இபாஸ் சோதனை நடைபெறுகிறது. கல்லாறு, குஞ்சபனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உட்பட 12க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.