100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் முறைகேடுகள் நடப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், திமுக அதற்கு பதில் கொடுத்துள்ளது. “சிபிஐ என்ன, எந்த விசாரணை அமைப்பையும் சந்திக்கத் தயார்” என திமுக எம்.பி தயாநிதி மாறன் சவால் விடுத்துள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க நிதியை விடுவிக்காமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாட்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டிய அண்ணாமலை, சிபிஐ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் கொடுப்பாரா எனக் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அண்ணாமலைக்கு பதில் கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டு அரசியலில் களங்கமாக நிற்கும் அவதூறுகளின் அரசன் அண்ணாமலை திராவிட மாடல் அரசின் மீது அவதூறு பரப்புவதும் பிறகு பல்டி அடிப்பதும் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு. அந்த வரிசையில் இப்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சிக்கி இருக்கிறார். 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகப் பொய்யைப் பரப்பி, அதனை நிறுவ முயன்று கொண்டிருக்கிறார் அண்ணாமலை. தமிழ்நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நாட்களை 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை. 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய ரூ.4,034 கோடியைத் தராமல், நாட்களை உயர்த்தவில்லை என ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல் பாசாங்கு காட்டுகிறார்.
2024 மக்களவைத் தேர்தலுக்காக மார்ச் 20 ஆம் தேதி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நாட்களை 100லிருந்து 150 ஆக உயர்த்துவோம் எனச் சொன்னோம். திமுக தேர்தல் அறிக்கை வெளியான பிறகு மார்ச் 28-ம் தேதி அவசர அவசரமாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தியது ஏன்? திமுக தேர்தல் அறிக்கையில் நாட்களின் எண்ணிக்கையை உயர்த்துவோம் எனச் சொன்னவுடன் முந்தி கொண்டு ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதே திமுகவின் சாதனைதான். நாட்களை உயர்த்துவதும் ஊதியத்தை உயர்த்துவதும் ஒன்றிய அரசின் பங்களிப்போடு நடக்கக்கூடியது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் படித்தார்?
பாடுபடும் ஏழை மக்களின் உழைப்புக்கான ஊதியத்தை கேட்டுத்தான் நாங்கள் போராடுகிறோம். அந்தப் போராட்டத்தையே சிதைக்கும் வகையில் பாஜக நிர்வாகியை விட்டு அதில் குழப்பத்தை ஏற்படுத்த அண்ணாமலை முயற்சி செய்தார். ஆனால் அது அம்பலப்பட்டதும் அடுத்தடுத்து பொய்களைப் பரப்பி வருகிறார். தமிழ்நாட்டை விட அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் குறைவான நிதியைப் பெற்றுள்ளதாக அண்ணாமலை தவறான புள்ளி விவரங்கள் அளித்திருக்கிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தைப் பொறுத்தவரை எந்த மாநிலம் சிறப்பாகச் செயல்படுத்தி உள்ளது, எந்த மாநிலம் சரியாகச் செயல்படுத்தவில்லை என்பதுதான் முக்கியம். குறிப்பாகத் தமிழ்நாட்டில் திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான ஆட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மிக மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவிலேயே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்.
தமிழ்நாட்டில்தான் 86 சதவீதம் பெண்களுக்கு இந்த வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதில் 29 சதவீதத்துக்கு மேல் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் மாற்றுத்திறனாளிகள். நாட்களை உயர்த்துவதும் ஊதியத்தை உயர்த்துவதும் ஒன்றிய அரசின் பங்களிப்போடு நடக்கக்கூடியது. இந்த ஆண்டு தமிழ்நாடு நிர்ணயித்த ‘மனித உழைப்பு நாட்களான’ 20 கோடி நாட்களைக் கடந்து 24 கோடி நாட்களைத் தொட்டுள்ளது. இதை 35 கோடியாக உயர்த்தித் தரவேண்டும் என்று ஆறு மாதங்களுக்கு முன்பே மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஏற்கனவே அளிக்கப்பட்ட வேலைக்குச் சுமார் ரூ 1056 கோடி நிதியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று உழைத்த உழைப்பாளிகளின் ஊதியத்தைத் தான் நாங்கள் கேட்கிறோம். இது எங்களது உரிமை. எங்களது உரிமைப் போராட்டம் பெரிய அளவில் வெற்றி பெறுவதால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தினமும் ஒரு பொய்யைப் பரப்பி அதில் சுகம் கண்டு வருகிறார் அண்ணாமலை. சிபிஐ என்ன, எந்த விசாரணை அமைப்பையும் சந்திக்கத் தயார். அதற்கு முன்பு முதலில் மத்திய அரசு நிதியை விடுவிக்கட்டும். உழைக்கும் மக்களின் உரிமைகளில் கீழ்த்தரமான அரசியல் செய்வதை பாஜகவும் அண்ணாமலையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.