திமுக அரசின் நடவடிக்கையை அறுவடை செய்யவே சீமானின் போராட்ட நாடகம்: சேகர்பாபு!

சர்ச்சைக்குரிய விழுப்புரம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்பட்டு அங்கு நாள்தோறும் பூஜைகள் நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

முன்னதாக, மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால், விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என சீமான் அறிவித்திருந்தார். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் எல்லோருக்கும் எல்லாம் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறது திமுக ஆட்சி. திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையே ஜாதி, சமய, மதங்களுக்கு அப்பாற்பட்ட சுதந்திரமான சுவாசக் காற்றை – அந்தந்த மதத்தினர் விரும்புகிற வழிபாட்டை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிற ஆட்சி. திமுக ஆட்சியில்தான் அன்றைய முதல்வர் கருணாநிதி, திருவாரூர் கோவில் தேரை ஓட வைத்தார். திருவாரூர் கோவிலில் ஜாதி தொடர்பான இடர்பாடுகள் எதுவும் இல்லை.

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், 20 ஆண்டுகள் ஓடாமல் இருந்த கண்டமாதேவி கோவில் தேரோட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரம் மேல் திரவுபதி அம்மன் கோவிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என நினைக்கின்றனர். அந்த திருக்கோவிலின் பூஜை நடைமுறைகள் அன்றாடம் நடைபெறும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு வார காலத்தில் அந்த கோவில் திறக்கப்பட உள்ளது.

இந்த ஆட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து காலம் கனிந்து வரும் நிலையில் ஒரு போராட்டத்தை அறிவித்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் அரசியல்வாதிகள். ஆகையால் ஆலய நுழைவுப் போராட்டம் போன்ற போலி அறிவிப்புகளை கண்டு மக்கள் மயங்கமாட்டார்கள்.இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

முன்னதாக சீமான் இது குறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் மூடப்பட்டிருந்த திரௌபதி அம்மன் கோவிலைத் திறந்து, பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து, ஓராண்டைக் கடந்த பிறகும், தமிழ்நாடு அரசு இதுவரை அனுமதி மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக அரசின் இத்தகைய சமூக அநீதிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, காலை 6 மணி முதல் 7 மணி வரை மக்கள் வழிபடக் கோயில் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது பச்சைப் பொய்யாகும். உண்மையில் திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்த அரசு அனுமதிக்கவில்லை என்று மேல்பாதி மக்கள் மிகுந்த மனவேதனையுடன் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசின் கடமை என்ன? மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலைத் திறக்க நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், திமுக அரசு திறக்க மறுப்பதேன்? மக்களிடையே கருத்து வேறுபாடு இருந்தால், இருதரப்பு மக்களையும் அழைத்துப் பேசி, மக்களை ஒற்றுமைப்படுத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வழிபாடு நடத்த வாய்ப்பேற்படுத்துவதே ஓர் நல்ல அரசின் கடமையாகும்.

“இறைவனுக்கு முன்பு எல்லோரும் சமம்தான்! உண்கிற கை உயர்ந்தது, உழைக்கிற கை தாழ்ந்தது என்ற பாகுபாடு இருக்கக் கூடாது; இறைவனுக்கு முன்பு இரு கையையும் இணைத்துதான் வணங்க வேண்டும். அப்படி இறைவனுக்கு முன்பு எல்லோரும் சமம் என்கிற எண்ணம் இல்லாதவன், இறைவனை வழிபடவே அருகதையற்றவன்” என்ற தாத்தா முத்துராமலிங்கத்தேவர் கூற்றுக்கிணங்க அனைத்து மக்களையும் அரவணைத்து, புரிதலை ஏற்படுத்தி, வழிபாட்டு உரிமையை பெறச் செய்வதே உண்மையான சமத்துவமாகும்.

அதைவிடுத்து, மக்களிடையே கலவரம் ஏற்படும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றெல்லாம் காரணங்களைக் கூறி, கோயிலைத் திறக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். மாணவர் வருகை குறைந்தால் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிடுவது, வழிபாட்டில் சிக்கல் என்றால் கோயிலை இழுத்து மூடிவிடுவது என்பதுதான் திராவிடம் கட்டிக்காத்த சமத்துவமா? பெற்றுத் தந்த சமூக நீதியா? போலி சமூக நீதி- ஆலய நுழைவு போராட்டம் எனவே, திராவிட மாடல் திமுக அரசின் போலி சமூகநீதி முகத்திரையைக் கிழித்து, உண்மையான சமத்துவத்தை நிலை நாட்டிட, தமிழ் இயக்கங்களை ஒன்றிணைந்து, மேல்பாதி மக்களை அழைத்துக்கொண்டு விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறியிருந்தார்.