ஆழ்கடல் சுரங்க அனுமதிகளுக்கான டெண்டர்களை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடற்கரைகளில் ஆழ்கடல் சுரங்க அனுமதிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்யக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து தனது வாட்ஸ்அப் சேனலில் தகவல் அளித்த ராகுல்காந்தி, உள்ளூர் மக்களிடம் ஆலோசனை கேட்காமலும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தாமலும் ஆழ்கடல் சுரங்கத்திற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறினார். சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பிடாமல் சுரங்கத்திற்கான டெண்டர்கள் அழைப்பதற்கு கடலோர சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுரங்கத்தின் தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல் தனியார் நிறுவனங்களை சுரங்கம் தோண்ட அனுமதிப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற கவலையை அந்தக் கடிதத்தின் மூலம் ராகுல் காந்தி வெளிப்படுத்தியுள்ளார். மில்லியன் கணக்கான மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு உடனடியாக இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.