உ.பி.யில் தமிழ் படிக்கும் மாணவர்கள், தமிழாசிரியர்கள் எத்தனை பேர்?: கார்த்தி சிதம்பரம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாணவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்; அப்படியானால் உ.பி.யில் தமிழ் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர்? எத்தனை தமிழாசிரியர்கள், தமிழ் மொழியை கற்பிக்கின்றனர்? என யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

உ.பி.யில் தமிழ் மொழியை கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை பேர்? எத்தனை மாணவர்கள் உ.பி.யில் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதற்காக பதிவு செய்துள்ளனர்? தமிழ்நாட்டில் இந்தி மொழியை தமிழ் மாணவர்கள் கட்டாயம் படிப்பதற்கு எந்த காரணமும் இல்லை. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதம், மொழி அடிப்படையில் பிரிவினையை உருவாக்குகிறார். இந்தி மொழியை ஏன் வெறுக்க வேண்டும்? ஒவ்வொரு மொழியையும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. கன்னடம், மலையாளம் மொழிகளையும் கற்றுத்தருகிறோம். அத்துடன் வெளிநாட்டு மொழிகளையும் கற்றுத் தருகிறோம். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்த மொழிகளை கற்றுத் தருகிறோம். உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளை கற்றுத் தரும்போது இந்தி மொழியை தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் ஏன் கற்றுத்தரக் கூடாது? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மிகவும் உறுதியாக பின்பற்றுகிறது. அதேபோல நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் அவசியமானது என்கிற குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. இந்த விவகாரங்களில் பாஜகதான் மிகவும் பதற்றமாக இருக்கிறது என்பதை அதன் தலைவர்கள் தந்து கொண்டிருக்கும் நேர்காணல்களே வெளிப்படுத்துகின்றன. “வெறுப்பு உணர்வு” பற்றி உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் நடத்த விரும்புகிறாரா? எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது. நாங்கள் எந்த ஒரு மொழியையும் எதிர்க்கவில்லை; நாங்கள் எதிர்ப்பது எல்லாம் மொழி திணிப்பையும் மேலாதிக்கத்தையும்தான். இது ஒன்றும் வாக்கு வங்கி அரசியலுக்கானதும் அல்ல. இது கண்ணியத்துக்கும் நீதிக்குமான யுத்தம். உ.பி. முதல்வர் பேசுவது அரசியல் பிளாக் காமெடி என விமர்சித்திருந்ததார். இந்த விவகாரத்தில்தான் கார்த்தி சிதம்பரம் தற்போது, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.