சாமியார் நித்யானந்தா இறந்துவிட்டதாக தகவல்?

சர்ச்சை சுவாமியாரான நித்தியானந்தா இறந்துவிட்டதாக, அவரது சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆயினும் இந்த தகவல் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி அவ்வப்போது தலைப்புச் செய்தியில் இடம் பிடித்து வந்த சர்ச்சை சாமியார் தான் நித்யானந்தா. இவர் முதன்முதலாக பிரபல நடிகையுடன் தனிமையில் இருந்த ஒரு வீடியோவின் மூலம் முதலில் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின் இவர் தனது பெண் சீடர்களை தவறாக நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதனால் இவர் மீது பெங்களூருவில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இவரை கைது செய்ய போலீசார் தேடினர். ஆனால் அப்போது அவர் தலைமறைவானவர், இன்று வரை யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக உள்ளார்.

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா 1978 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில், அருணாச்சலம் மற்றும் லோகநாயகி தம்பதிகளின் இரண்டாவது மகனாவார். முதன் முதலாக நித்யானந்தா 1990 ஆம் ஆண்டு, 12 ஆவது வயதில் திருவண்ணாமலை அடிவாரத்தில் புத்தபூர்ணிமா நாளில் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடைந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஆன்மீக வாழ்க்கையினைத் தொடர்ந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி இமயமலையில் மேற்கொண்ட கடுமையான தவத்தினால் பேரானந்த நிலையினை அடைந்ததாகவும், தன்னுள் நிகழ்ந்த நித்திய ஆனந்தம் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தியானபீடம் என்ற சேவை நிறுவனத்தை 2000 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். தற்போது இந்த நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முதன்முதலாக இவர் கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் ஒன்றை அமைத்தார். அதன் பின் பல்வேறு இடங்களிலும் ஆசிரமங்களை நிறுவினார். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுவாமி நித்யானந்தாவும் பிரபல நடிகையும் நெருக்கமாக இருந்த ஒரு வீடியோவை பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அப்போது இவர் தன்னைத் தானே நியாயப்படுத்திக் கொண்டார். மேலும் இவர் அப்போது வெறும் ‘சவாசனம்’ பயிற்சி செய்ததாகவும், தான் ஆண்மையற்றவர்கள் என்றும் கூறினார். அதோடு அவர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டம் கர்கி எனும் ஊரில் சுவாமி நித்தியானந்தா தலைமறைவாக இருந்தார். பின் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் அன்று கர்நாடக காவல்துறையினர் நித்யானந்தாவை கைது செய்தனர். அதன்பின் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அமெரிக்க பெண் ஒருவர் நித்யானந்தா தன்னை 5 ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறிய போது, மீண்டும் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். இப்படி பாலியல் வன்கொடுமைகள், அத்துமீறல்கள், ஆபாசச் சீண்டல்கள் செய்ததாக பல வழக்குகள் இவர் மீது போடப்பட்டுள்ளன.

பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா, குஜராத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா பின் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவர் ஆஸ்திரேலியாவின் அருகே ஒரு தீவை வாங்கி, அதற்கு ‘கைலாசா’ என்று பெயரிட்டு, ஒரு நாட்டை அமைத்துவிட்டதாக பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு இது இந்துக்களுக்கான நாடு எனவும், தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். தொழில் தொடங்க நினைப்போர் இங்கு வருமாறும் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு, தனது பக்தர்களுடன் உரையாற்றி வந்தார்.

ஒரு முறை 2022 ஆம் ஆண்டில் நித்யானந்தா உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாக தகவல் ஒன்று வெளியானது. உடனே நித்யானந்தா, அதற்கு மறுப்பு தெரிவித்து, தான் சமாதி நிலையில் இருப்பதாக கூறினார். இப்படி அவ்வப்போது இவரைப் பற்றி ஏதாவது ஒரு புரளி பரவிக் கொண்டே இருக்கும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவரது வீடியோக்கள் வெளிவருவது குறைந்துள்ள நிலையில், இவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுயநினைவின்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுவும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நித்யானந்தாவின் சகோதரியின் மகன், இந்து தர்மத்தைக் காக்க நித்யானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது உண்மையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இன்று ஏப்ரல் 01 ஆம் தேதி என்பதால், மக்களை ஏமாற்றுவதற்காக இப்படியான ஒரு செய்தி வெளிவந்திருக்குமோ என்ற ஒரு கேள்வி எழுகிறது. எனவே உண்மையிலேயே நித்யானந்தா இறந்துவிட்டாரா, இல்லை இது வெறும் ஏமாற்று செய்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், இவருக்கு இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.