மதுரையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை!

மதுரையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான். மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை பிடிக்கச் சென்ற போது சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக படுகொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள், அடுத்தடுத்து நடந்து வருகிறது. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக இருந்தது. போலீசார் சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், என்கவுன்டர் ஆயுதத்தை அரசு கையில் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் போலீஸ்காரரை கொலை செய்த நபர் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர்.

இந்நிலையில் நேற்று மதுரை ரிங் ரோட்டில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி சுபாஸ் சந்திர போஸ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22-ல் கிளாமர் காளி என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். கொலை தொடர்பாக இரு தனிப்படைகளை அமைத்து ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் தேடி வந்தனர். வழக்கில் ஏற்கெனவே ஜெயக்கொடி, கார்த்திக் உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்திருந்தது.

கொல்லப்பட்ட நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை போலீசாரை தாக்க முயற்சித்தபோது சுடப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன் சென்றார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுபாஷ் சந்திரபோசுக்கு காளீஸ்வரன் கொலை வழக்கு மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு இருக்கிறது. இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது துப்பாக்கி வைத்து போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட முயன்றுள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்துள்ளார். மேலும், மதுரை மாநகர் பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.