பாஸ்கரன் குமாரசாமியை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதை கைவிட வேண்டும்: சீமான்!

ஈழத்தமிழ்ச் சொந்தம் பாஸ்கரன் குமாரசாமியை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை உடனடியாக கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

2016ஆம் ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ்ச்சொந்தம் சகோதரர் பாஸ்கரன் குமாரசாமியை, வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்த இந்திய ஒன்றிய அரசு முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.

சுவிட்சர்லாந்து நாட்டின் குடியுரிமையைப் பெற சகோதரர் பாஸ்கரன் குமாரசாமி முயன்று வரும் நிலையில் அதனைப் பெறுவதற்குக்கூட தமிழ்நாடு அரசு அனுமதிக்க மறுப்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.

இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, ‌நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய் நிர்கதியற்ற நிலையில் இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களை, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் மனிதநேயம் சிறிதுமின்றி வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது வன்மையான கண்டனத்துக்குரியது.

அடிப்படை உரிமைகள், வாழ்விட வசதிகள் என ஏதும் வழங்காமல் அடிமைகள் போலத் திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் அடைத்துவைத்த போதிலும் உயிர்ப்பாதுகாப்பு என்ற ஒன்றாவது இருந்தது. தற்போது அதனையும் பறிக்கும் விதமாக ஈவு இரக்கமற்று இனவாத நாடான இலங்கைக்கு அனுப்புவது கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பாகும்.

தமிழினத்திற்கு யாதொரு தொடர்புமில்லாத பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளும் தம்மை நாடிவந்த தமிழ் மக்களுக்கு அடைக்கலமளித்து, அரவணைத்து, ஆதரித்து அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்து வாழ்வளிக்கின்றன. அந்நாட்டின் விளையாட்டு வீரர்களாக, அரசியல் பிரதிநிதிகளாக வாய்ப்பு வழங்கப்பட்டு மிகுந்த மரியாதையுடன் வாழ்விக்கப்படுகின்றனர். அரபு நாடுகளும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குச் சிறப்பு குடியுரிமை வழங்கி பெருமைபடுத்துகின்றன. ஆனால், ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து திருச்சியில் வாழும் நீச்சல் வீராங்கனை அன்பு மகள் தனுஜா 120 தங்கப்பதக்கங்கள் வென்ற பிறகும், இந்திய குடியுரிமையைக் கேட்டு இன்றுவரை சட்டப்போராட்டம் நடத்தி வருவது பெருங்கொடுமையாகும்.

பத்து கோடி தமிழர்கள் தனித்த பெரும் தேசிய இனமாக, நிலைத்து நீடித்து வாழும் இந்நாட்டில், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்கள், கல்வி – விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தைத் தராமல் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என விரட்டுவது தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிப்பதாகும்.

இலங்கையிலிருந்து வந்த ஈழச்சொந்தங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா? பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களென இந்நாடு கருதுமா? சீனாவிலிருந்து அகதிகளாக வரும் திபெத்திய மக்களை அவ்வாறு கூறி துரத்துமா? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்னென்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் நூற்றில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்த நாடு எந்தக் கூடுதல் சலுகையும் அளிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மைப் போன்ற இரத்தமும் சதையும் கொண்ட சக மனிதர்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி இருக்கலாமே?

இனவெறி நாடான இலங்கைக்குத் துணைநின்று ஈழத்தாயகத்தை முற்றாகச் சிதைத்தழித்து, தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்கள் ஏதிலியாக காரணமான இந்திய அரசு, இன்றைக்கு தஞ்சம் கேட்டு நிற்கையில்,
அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி துரத்துவது எவ்வகையில் நியாயமாகும்? குறைந்தபட்சம் அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்காவது செல்ல அனுமதிக்கலாமே? அதைக்கூட மறுப்பது எவ்வகையில் நியாயம்? சகோதரர் பாஸ்கரன் குமாரசாமி தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறும் நிலையில், அதையும் மீறி அவரை இலங்கைக்கு அனுப்ப முயல்வது பெருங்கொடுமையாகும்.

ஆகவே, ஈழத்தமிழ்ச் சொந்தம் பாஸ்கரன் குமாரசாமியை இனவாத நாடான இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகக் கைவிடுவதோடு, விரும்பும் நாட்டுக்கு செல்ல அவரை அனுமதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.