அதிமுக, பாஜக, தவெக இடையே இரண்டாம் இடத்துக்குத்தான் போட்டி: திருமாவளவன்!

“பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்தச்சூழலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஏப்.1) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், 2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “வட இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்திலே வரும் என்ற எண்ணத்தில் அமித்ஷா கூறியிருப்பார். தமிழகத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது அவருக்கேத் தெரியும். இன்னும் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் உறுதியான எந்த நிலைப்பாட்டையும் எடுக்கமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அதிமுகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்கவில்லை. பாஜகவும் இன்னும் ஒரு அணியை உருவாக்க முடியவில்லை. புதிதாக கட்சித் தொடங்கியிருக்கிற நடிகர் விஜய்யும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக தெரியவில்லை.

அண்மையில் நடந்த தவெக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியபோது, அதிமுக-பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. தவெக-தான் இரண்டாவது பெரிய கட்சி என்றே கூறியுள்ளார். எனவே, பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்தச்சூழலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.

மேலும், “மகராஷ்டிரா மாநிலத்தை வட இந்தியாவோடு பார்ப்பதில்லை. அதுவும் கிட்டத்தட்ட தென்னிந்தியாவோடுதான் இருக்கிறது. தாய்மொழி உணர்வு இப்போதுதான் தமிழகத்தைத் தாண்டி பலருக்கும் உருவாகி வருகிறது. இந்தி திணிப்பை அவர்கள் இதுவரை ஒரு எதிரான நடவடிக்கையாகவே பார்க்காமல் இருந்துவிட்டனர். அதனால், வடஇந்தியாவில் பூர்வக்குடி மக்கள் பேசிய பல மொழிகள் அழிந்துப் போயிருக்கின்றன.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்கூட தங்களது தாய்மொழி இந்தியால் அழிக்கப்பட்டுவிட்டது என்று, சட்டமன்றத்திலேயே பேசக்கூடிய அளவுக்கு தற்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறன. இதற்கெல்லாம் தமிழகம்தான் ஒரு முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்பதை, இப்போது வெவ்வேறு மாநிங்களில் உள்ள மக்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.” என்றார்.

திமுக கூட்டணியில் உறுதியாக இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் விசிகவின் நீண்ட கால கோரிக்கையான ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு 2026ல் கேட்கப்படுமா? என்ற ரீதியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளன், “இதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. தேர்தலுக்கு 9 மாத காலம் தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு கூட்டணி ஆட்சி அமைவதற்கு காலம் கனியும். அதற்கான சூழல் இன்னும் அமையவில்லை. திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுக அதிமுக ஏதாவது ஒரு கட்சி இன்னும் பலவீனப்படும்போது இந்த கோரிக்கை வலுவாக மாறும். பாஜகவும் அதிமுகவும் பொருந்தாத கூட்டணி. அரசியலுக்காக வலிந்து உருவாக்கப்பட கூட்டணியே தவிர அடிப்படையில் பொருந்தாத கூட்டணி. அதனால் அவர்கள் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை.

திமுக கூட்டணியில் கருத்து உரசல்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படை கொள்கைகளில் அனைவருக்கும் ஒருமித்த பார்வை உள்ளது. ஆகவே இந்த கூட்டணியில் ஒரு வலு உறுதிப்பாடு உள்ளது. வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய உள்ளோம். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மோசமான ஒரு தாக்குதலாக அமையும். பாஜக அரசு இஸ்லாமிய உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றி வருகிறது. இது இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக போய் முடியும். இவ்வாறு அவர் பேசினார்.