கச்சத்தீவு மீட்பு குறித்து இன்று தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு குறித்து மத்திய அரசை வலியுறுத்தி நாளை தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் கச்சத்தீவு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருக்கிறது. இந்தியா அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு 1974 ஆம் ஆண்டு இலங்கையுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் காரணமாக அந்த நாட்டுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. கடந்த காலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு வலைகளை காய வைப்பது உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து கச்சை தீவு இலங்கைக்கு தாரை வாக்கப்பட்ட நிலையில் தற்போது அதுவே தமிழக மீனவர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

கச்சத்தீவு விட்டுக் கொடுக்கப்பட்டதால் தங்களது பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் மறுக்கப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து இலங்கை கடற் படையினரை கண்டித்து தமிழக மீனவர்கள் ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும் இலங்கை கடற்படை அத்துமீறி வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியின் போது கட்சியைத் தீவு தாரைவாக்கப்பட்டதாகவும், அதற்கு திமுக தான் காரணம் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது. அதிமுகவும் இதே கருத்தை சொல்லி தான் அரசியல் செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று புதன்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வர இருக்கிறார். கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.