கச்சத்தீவை மீட்பது தொடர்பாக திமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஆதரித்த, தமிழக காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் செல்வப்பெருந்தகையும், வெளியே வந்து, ‘கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது தவறல்ல’ என்று தங்கள் நிலைப்பாட்டை மாற்றினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜெய்சங்கர், அன்று வெளியுறவுத்துறை செயலராக இருந்தவர். அவர் இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது சரி என்று பேசியிருக்கிறார். யுத்தம் நடத்தியா அந்த இடத்தை பெற முடியும் என்று ஏஜி முகுல் ரோஹித் தெரிவிக்கிறார். அது கொடுத்தது கொடுத்தது தான், அதற்கு பதில் நாம் ஏராளமான இடங்களை பெற்றிருக்கிறோம் என்று சில இடங்களில் தெரிந்தோ, தெரியாமலோ, அன்னை இந்திராகாந்தியின் பெருமையை பாஜக தலைவர்கள் பேசத் தான் செய்கிறார்கள்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் எங்களுடன் கூட்டணியில் இருந்தீர்கள். உங்களுடைய தலைவர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோர் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்துள்ளனர். அப்போதெல்லாம் நீங்கள் ஏன் வாய் திறக்கவில்லை என்று நாங்கள் கேட்க தயாராக இல்லை. எல்லோரும் முயற்சி செய்வோம், முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை வெற்றி பெற செய்வோம், கச்சத்தீவை மீட்போம்.
அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் கேட்டு தான் கச்சத்தீவு கொடுக்கப்பட்டதா என்பது, அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், மறைந்த கருணாநிதிக்கும் தான் தெரியும். பத்திரிக்கையாளர்கள் ஒன்றை ஆய்வு செய்ய வேண்டும். 282 ஏக்கர், குடிக்க தண்ணீர் கூட இல்லாத ஒரு வானம் பார்த்த பூமியை சின்ன இடத்தை கொடுத்துவிட்டு, இந்தியாவுக்கு எத்தனை லட்சம் ஏக்கர் நிலத்தை இந்திராகாந்தி பெற்றார் தெரியுமா. ஒரு ஒப்பந்தத்தை மட்டும் பார்க்க கூடாது, இரண்டு ஒப்பந்தங்கள் அதில் இருக்கிறது.
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது அப்போதும் சரி தான், இப்போதும் சரி தான். அதை நாங்கள் வாபஸ் பெறப் போவதில்லை. ஆனால், மீனவர்கள் கச்சத்தீவை மீட்டெடுத்தால் நாங்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியும், எங்கள் வலையை கிழிக்க மாட்டார்கள், படகு சேதமடையாது என்கிறார்கள். அவர்களை யாரும் எதுவும் சொல்லவில்லை. மீட்டெடுப்பது நம் கடமை, அதில் மாற்று கருத்துகிடையாது. ஆனால், இந்திராகாந்தி ஒரு போதும் தவறு செய்யவில்லை என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தெரியும். இந்திராகாந்தி உடன்படிக்கையை தயவு செய்து கூகுளில் தேடிப்பாருங்கள். எத்தனை லட்சம் ஏக்கர்.. அங்குள்ள கனிம வளங்கள் என்ன.. அங்குள்ள பல்லுயிர்கள்.. விலை மதிக்க முடியாதது.
இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் அங்கு மீன் பிடிக்கலாம், விசா இல்லாமல் அந்தோனியார் ஆலயம் போகலாம் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இலங்கை-இந்திய மீனவர்கள் கூட்டு கூட்டங்களை நடத்திய, கச்சத்தீவில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடலாம் என்றது மன்மோகன் சிங் அரசு. பாஜக அரசு இதுவரை அந்த கூட்டத்தை நடத்தவில்லை. எப்போதுமே காங்கிரஸ் மீனவர்களின் நண்பன், உண்மையான நண்பன். நடிப்பு நண்பன் அல்ல. ராகுல் காந்தி மீனவர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சட்டமன்றத்தில் பேசிய விசிக.வோ வேறு மாற்று கட்சிகளோ, இந்திராகாந்தி பெயருக்கு முன்னாள் எதுவும் பேச முடியாது. 2 விசயம் தான், வாஜ்பாய் யாரு? ஆர்எஸ்எஸ், பாஜகவால் ஏற்றுக் கொண்ட மகாபுருஷர். அவரே இந்திராகாந்தியை துர்காதேவி என்று கூறியுள்ளார். அவரே சொல்லிவிட்டார், இவர்கள் சொல்வதால் என்ன? இவ்வாறு செல்வப்பெருந்தகை பேசினார்.