மு.க.ஸ்டாலினை முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்று அழைக்கலாம்: சத்யராஜ்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் அழைக்கலாம், முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் அழைக்கலாம் என புகழாரம் சூட்டியுள்ளார் நடிகர் சத்யராஜ்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய விழா என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று சூரிய மகள் 2025 என்ற தலைப்பில் மகளிருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையிலும் மேயர் பிரியா ஏற்பாட்டிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், சூரியமகள் விருதுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகர் பிரபு ஆகியோர் வழங்கினர்.

சூரிய மகள் விருதுகளை பொறுத்தவரை பல்வேறு துறைகளைச் சார்ந்த 35 மகளிருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் எழுத்தாளர் சிவசங்கரி, திரைப்பட நடிகை சி.ஆர்.விஜயகுமாரி, பின்னணி பாடகி பி.சுசீலா, வழக்கறிஞர் அருள்மொழி, ஆண்டாள் பிரியதர்ஷினி, பாரதி பாஸ்கர், முனைவர் பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 35 பேர் விருதுகளை பெற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ் கூறியதாவது:-

சூரியமகள் கையில் புத்தகம் வைத்திருப்பது போன்ற சிலை உள்ளது. பெண் விடுதலை வேண்டுமென்றால் கையிலுள்ள கரண்டியினை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுங்கள் என்றார் பெரியார். மு.க.ஸ்டாலின் அவர்களை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புலுள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். அவரது முதுகெலும்பு வெறும் எழும்புகளால் ஆனது அல்ல. ஏனென்றால் மிசா சட்டத்தில் சிறையில் பூட்ஸ் காலில் மிதிபட்டு பலமில்லாமல் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையாலும், பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதையத்தாலும், கலைஞரின் நெஞ்சுக்கு நீதியால் ஆனது. அன்பு அண்ணியார்( தமிழ்நாடு முதல்வர் அவர்களின் துணைவியார்) முன்னிலையில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பது பெருமையாக உள்ளது. அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக அல்ல அரணாக இருப்பவர். அதனால் தான் ஆன்மீகத்தை சொல்லி ஆட்டையை போட நினைப்பவர்கள் பயப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் பிரபு கூறியதாவது:-

தாயின் முக்கியத்துவத்தை முன்வைத்து எத்தனையோ பாடல்கள் வந்துள்ள தமிழ்நாட்டில் சாதனைபடைத்த பெண்களை அழைத்து விருது கொடுத்தற்கு அண்ணன் முதல்வர் அவர்களுக்கும் தம்பி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி. ஊக்குவித்தால் நாடும் வளரும் மக்களும் வளர்வார்கள். தமிழகத்தின் முதல் பெண்மணி அண்ணியார் அவர்கள். அண்ணியை சாதராணமாக எண்ண வேண்டாம் அந்த வீட்டிற்கு பெரிய பலமே அண்ணி தான். அடக்கம் அமைதி புன்னகை என எப்போதும் இருப்பவர். நடிகர் திலகத்திற்கு ரசிகர்கள் பலர் இருப்பவர். ஆனால் நடிகர் திலகம் சத்யராஜ் ரசிகர். அண்ணி (துர்கா ஸ்டாலின் ) அவர்கள் அண்ணன் மீது பாசம் கொண்டவர். பிள்ளைகள் மீது அன்பு கொண்டவர். எப்படி அண்ணி அவர்கள் குடும்பத்தின் தூணாக இருக்கிறார்களோ அது போல் என் அம்மா எங்கள் குடும்பத்தில். இப்போது என் மனைவி இருக்கிறார் இவர்கள் இல்லையென்றால் நாம் இல்லை. பெண்கள் நாட்டின் பொக்கிஷங்கள். இவ்வாறு அவர் கூறினார்.