கடலூர் அருகே ‘வழிப்பறி’ ரவுடி விஜய் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

கடலூர் அருகே லாரி ஓட்டுநர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த புதுச்சேரி ரவுடி விஜய் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். வழிப்பறிச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் அருகே உள்ள ஆணையம் பேட்டை தனியார் ஓட்டலின் அருகே, விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இன்று (ஏப்.2) அதிகாலை 3 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பிரபு (43), திண்டிவனத்தில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றி வந்த லாரியை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த ஆறு பேர், லாரி ஓட்டுநர் பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரம் பணம், டார்ச் லைட் மற்றும் செல்போனை பிடுங்கிக் கொண்டு, அவரை தக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்த மர்ம கும்பல் பெரியப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சேவை சாலையில் திண்டிவனத்தில் இருந்து எம். சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த சீர்காழியைச் சேர்ந்த ஓட்டுநர் மணிமாறன் (35) லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே 6 பேர் கொண்ட கும்பல், மணிமாறனை எழுப்பி அவர் வைத்திருக்கும் பணம் மற்றும் செல்போனை கேட்டுள்ளனர். தன்னிடம் எதுவும் இல்லை என்று ஓட்டுநர் மணிமாறன் கூறியுள்ளார். அவரை ஆபாசமாக திட்டி அடித்து, கத்தியால் அவரது தலையில் தாக்கிய அந்த மர்ம கும்பல், அங்கிருந்து சென்றுள்ளனர். இதில் காயமடைந்த ஓட்டுநர் மணிமாறன் ‌கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். மேலும், அந்த கும்பல் எம்புதூர் கிராமமம் அருநே நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவரை தாக்கி அவருடைய செல்போனை பிடிங்கிச் சென்றுள்ளது. இந்த தொடர் வழப்பறிச் சம்பவங்கள், லாரி ஓட்டுநர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தனிப்படை அமைத்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க உத்தரவிட்டார். கடலூர் மாவட்டம் எம்புதூர் முந்திரி காட்டுப் பகுதியில், இந்த வழிப்பறி கும்பல் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைந்தது. இதையடுத்து திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் சந்திரன் தலைமையில் போலீஸார் எம்புதூர் முந்திரி காட்டு பகுதிக்கு சென்றனர். லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பல் அங்கு பதுங்கியிருந்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களைப் பிடிக்க முயற்சித்தனர்.

அப்போது வழிப்பறிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீஸாரை அரிவாளால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில், போலீஸார் கணபதி, கோபு ஆகியோர் காயம் அடைந்தனர். இதையடுத்து ஆய்வாளர் சந்திரன், புதுச்சேரியை சேர்ந்த ரவுடி விஜய்யை (20) துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்த புதுச்சேரியை சேர்ந்த ரேவந்த்குமார் (21), விழுப்புரம் மாவட்டம் பில்லூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (17), புதுச்சேரியை சேர்ந்த அன்பரசு (20) மற்றும் ஆகாஷ், திரியாஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த போலீஸார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விஜய் மீது கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை மாநிலத்தில் கொலை முயற்சி, வழிப்பறி, ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.