வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவானது மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருப்பதாக திமுக எம்பி ஆ. ராசா கூறினார்.
மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பங்குபெற்று ஆ. ராசா பேசியதாவது:-
அமைச்சரின் தைரியமான பேச்சைக் கேட்டேன். அவருக்கு இதுபோன்ற துணிச்சலான பேச்சு எங்கிருந்து வந்தது என்று ஆச்சரியப்பட்டேன். அனைத்துக் கதைகளையும் நாடாளுமன்றத்தில் சொல்வதற்கு எங்கிருந்து தைரியம் வந்தது. உங்கள் பேச்சையும் கூட்டுக் குழுவின் அறிக்கையையும் ஒப்பிட்டு இரண்டும் பொருந்துகிறதா என்பதை பாருங்கள். இரண்டும் பொருந்தியிருந்தால் அவையில் இருந்து ராஜிநாமா செய்துவிடுகிறேன்.
வக்ஃப் மசோதாவை தாக்கல் செய்யும்போது நீங்கள் சொன்ன ஒரு எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் கைவிடப்பட்ட சொத்துகள் இருப்பதாக தெரிவித்தீர்கள். நாடாளுமன்ற கூட்டுக் குழு தமிழகத்துக்கு வந்து பார்த்தது. மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை செயலாளர் உரிய ஆவணங்களுடன் கூட்டுக் குழுத் தலைவரை சந்தித்து நீங்கள் கட்டிவிட்ட கதைகள் பொய் என நிரூபித்தார்கள். இப்படிப்பட்ட கதைகள் கட்டிவிட்ட நீங்கள் தற்போது நாடாளுமன்ற கட்டடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டது என்று புதிய கதையை கூறுகிறீர்கள். இதில் என்ன முரண் என்றால் சிறுபான்மையினரை பாதுகாப்பதாக கூறும் கட்சியில் சிறுபான்மையினரை சேர்ந்த எம்பிக்களே இல்லை. ஆனால் மதச்சார்பின்மை பற்றி நமக்கு அவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.
நாட்டின் தலையெழுத்தை முடிவு செய்யும் முக்கியமான நாள் இன்று. நமது சுதந்திர போராட்ட வீரர்கள், முன்னோடிகள் வகுத்த பாதையில் செல்லப் போகிறதா? அல்லது நாட்டை ஆளும் மதவாதிகளின் பாதையில் செல்லப் போகிறதா?
வக்ஃப் மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருக்கிறது. அதில் எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை. முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே எங்கள் நிலைபாடு. இதுதொடர்பாக தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
நாட்டின் இறையான்மை என்பது இந்த அவையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். புதிய சட்டத்திருத்தம் வக்ஃப் சொத்துகளை அரசு அபகரிக்கும் அதிகாரம் வழங்குகிறது. சொத்துகளை கணக்கெடுப்பதற்கான ஆய்வு நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 90 சதவிகித நிலக் கணக்கெடுப்புகள் நிறைவடைந்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வக்ஃப் வாரியத்தின் சொத்துகள் அரசுக்கு சொந்தமானதாக கண்டறியப்பட்டால், அது வக்ஃப் சொத்தாக ஏற்கப்படாது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் அரசு சொத்து என்பதை கண்டறிவார்கள்? நீங்களே கண்டறிந்து கையகப்படுத்துவீர்களா?
மேம்படுத்தல் என்ற பெயரில் வக்ஃப் கோட்பாட்டை சிதைகிறது. சட்டத்தின் அடிப்படையில் வக்ஃப் சொத்துகளை கையகப்படுத்த முயற்சிக்கிறது. வக்ஃப் வாரியத்துக்கும் அரசுக்கும் பிரச்னை ஏற்பட்டால் நில அளவை அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு ஆட்சியர் எப்படி நீதிபதியாக செயல்பட முடியும்? இவ்வாறு அவர் பேசினார்.