பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்க வேண்டும். தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தலைவர் மறைவுக்குப் பிறகு ஜா. அணி – ஜெ. அணி இணைப்புக்கும் புரட்சித் தலைவி மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா தி.மு.க. ஒற்றுமைக்குப் பணியாற்றி இருக்கிறேன் என்ற தகுதியில் தான் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று அதிமுக-வுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன்.
அ.தி.மு.க.வினர் ஒன்றுபடவேண்டும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டும். பா.ஜ.க. மற்றும் தோழமைக் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவோம்.
எம்.ஜி.ஆர். எப்போதும் மத்திய அரசோடு மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம். கூடிவாழ்ந்தால் கோடி நன்மை.. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.. மறப்போம் மன்னிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.