‘கிராம அளவில் வரை அதிமுகவின் ஓட்டு வங்கி வலுவாக உள்ளது. அவர்களின் ஓட்டு வங்கி மிகவும் பலமாக உள்ளது. இரட்டை இலை என்கிற சக்தி வாய்ந்த சின்னம், அவர்களிடம் இருக்கிறது’ என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் கூறியுள்ளதாவது:-
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் பயங்கர சவாலாக இருக்கும். களத்தில் கூட்டம் அதிகரித்துவிட்டது. ஏற்கனவே இரு திராவிட கட்சிகள் பலமாக உள்ளனர். திமுகவில் தொண்டர் ரீதியாக அடிப்படை கட்டமைப்பு பலமாக உள்ளது. கட்சிக்கான கட்டமைப்பும் உள்ளது. அடுத்த தலைமுறைக்கான தலைவரையும் அவர்கள் அறிமுகம் செய்துவிட்டார்கள். அது தேர்தலில் ஜெயிக்கிறது, தோற்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், அந்த கட்சி அடுத்த 25 ஆண்டுகளுக்கு எதுவும் ஆகாது. அடுத்த தலைமுறை தலைவரையும் திமுகவில் ஏற்றுக் கொண்டுவிட்டனர். மக்கள் ஏற்பது ஒரு பகுதி, கட்சியினர் ஏற்பது ஒரு பகுதி. கட்சியினர் ஏற்றுக் கொண்டு விட்டனர். அதனால் தேர்தல் ரீதியான பிரச்னைகளை சந்தித்தால் கூட, திமுக அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிரச்னை இல்லாமல் பயணிக்கும்.
அதிமுகவை எப்போதும் எல்லாரும் குறைத்து மதிப்பிடுவார்கள். இது தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் இந்த மதிப்பீடு உண்டு. காரணம், அதிமுகவுக்கு சமூக வலைதள செயல்பாடு மிக மோசம். ஆனால், அதற்காகவே அந்த கட்சி இல்லை என்று பலர் நினைக்கின்றனர். இன்னொன்று, அந்த கட்சி தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. அதனால், வடமாநில வெளிச்சம் அவர்கள் மீது விழுவதில்லை. ஜெயலலிதாவுக்கு பிறகு, அக்கட்சியின் தலைவர்களை தேசிய ஊடகங்கள் அறியவில்லை. அதனால் அந்த கட்சி பலவீனமாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை, கிராம அளவில் வரை அதிமுகவின் ஓட்டு வங்கி வலுவாக உள்ளது. அவர்களின் ஓட்டு வங்கி மிகவும் பலமாக உள்ளது. இரட்டை இலை என்கிற சக்தி வாய்ந்த சின்னம், அவர்களிடம் இருக்கிறது. ஒற்றை தலைமை இல்லாததால் அவர்கள் சிரமத்தை சந்தித்திருக்கலாம். ஆனால் அதன் அடித்தளம், நாளைக்கே மறைந்து போகும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதிமுகவும் ஒரு பலமான கட்சி.
இப்போ விஜய், தவெக என்கிற கட்சியை ஆரம்பித்திருக்கிறார். கொள்கை ரீதியாக தெளிவு இல்லை என்றாலும், திராவிட சாயலில் தான் அவர்களின் கட்சி இருக்கிறது. தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை அவர்கள் எதிர்க்கிறார்கள். திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், புது முகம் வேண்டும் என்கிற ஏக்கம் எப்போதும் தமிழ்நாட்டில் உண்டு. பரிட்சையமான ஒரு ஸ்டார் வரும் போது, எடுத்த எடுப்பில் ஒரு தாக்கம் இருக்கும். தேர்தலில் வெற்றியை தருமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ரசிகர்கள் பலம் இருக்கிறது. அதனால் அந்த கட்சியை குறைவாக நான் மதிப்பிடவில்லை. என்ன ஓட்டு வாங்குகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் இது போன்ற கட்சிகள் வரும் தமாக, மதிமுக, தேமுதிக என பல கட்சிகள் வந்தன, பின்னர் அவை பெரிதாக போகவில்லை.
அண்ணாமலை வந்த பின், பாஜகவும் பரவலாக பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின் சமூக ரீதியான கட்சிகளாக பாமக, விசிக.,வுக்கு ஒரு ஓட்டு வங்கி உள்ளது. இப்படி களத்தில் பெரிய ஓட்டுகளை கொண்ட கட்சிகளுக்கு மத்தியில் தான் காங்கிரஸ் பயணிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் போது தான் காங்கிரஸ் பேசப்படுகிறது. தினமும் டீக்கடை போனால், காங்கிரஸ் கட்சிப் பற்றி யாரும் பேசுவதில்லை. மக்கள் எண்ணத்தில் காங்கிரஸ் இல்லை. அதை தலைவர்கள் செயல்பாடு தான் கொண்டுவரும்.
திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, அதிமுகவில் எடப்பாடி, தவெக.,வில் விஜய், நாம் தமிழர் கட்சியில் சீமான், பாஜகவில் அண்ணாமலை ஆகியோரை தான் அவர்களின் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார்கள். எல்லா கட்சியிலும், அதன் தலைவர்களை முதலமைச்சர் வேட்பாளராக பார்க்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியில், அதன் தலைவரை அப்படி பார்ப்பதில்லை. கட்சியிலேயே பார்க்காத போது, மக்கள் எப்படி பார்ப்பார்கள்? கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இதே நிலை தான்.
கூட்டணியில் இருப்பதாலேயே, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்க கூடாது. பொதுமக்கள் பிரச்சனையை பேச வேண்டும். காங்கிரஸ் கட்சி சுதந்திரமாக மக்கள் பிரச்சனையை பேசுவதில்லை. இப்போ நான் பேசுகிறேன், ஆனால் நான் கட்சி கிடையாது. கட்சியாக தனிப்பட்ட கருத்தை காங்கிரஸ் வெளிப்படுத்துவதில்லை. இதே பாணியில் போனால், காங்கிரஸ் இன்னும் பின்தங்கி போகும். நடை, உடை, பாவனையை காங்கிரஸ் மாற்றினால், ஆட்சியை பிடிக்கும் பாதைக்கு வர முடியும். ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆற்றல் இன்றைய காங்கிரஸில் இல்லை. நான் சொல்வது சிலருக்கு கோபம் வரவைக்கும். ஆனால் உண்மை அது தான். இவ்வாறு நேர்காணலில் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.