வக்பு வாரியத்தால் இந்துக்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்: அண்ணாமலை!

சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்ற திமுக நாடகம் ஆடுவதாகவும், வக்பு வாரியத்தால் இந்துக்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேறியது. இதனை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். விதி எண் 110-இன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது. ஆனால், இவை அனைத்தையும் மீறி, நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்; ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், எதிர்த்து வாக்களித்த 232 என்ற எண்ணிக்கை சாதாரணமானது அல்ல. எதிர்ப்பு வாக்குகள் இன்னும் கூடுதலாகக் கிடைத்திருக்கலாம்.

இந்தியாவில் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால், அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பின் மீதான தாக்குதலாகும்; மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் செயலாகும். இதை உணர்த்தும் வகையில், கருப்புச் சின்னம் அணிந்து, இன்றைய பேரவை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கேற்கிறோம்.

சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் இச்சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு போராடும்! போராடும்! போராடும்! அதில் வெற்றியும் பெறும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான இத்தாக்குதலை சட்டப்படி தடுப்போம் என்று இம்மாமன்றத்தில் உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ’எக்ஸ்’ வலைத்தளத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பதும், வக்பு மசோதாவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதும் உட்பட இன்று சட்டமன்றத்தில் திமுகவின் துரதிர்ஷ்டம் மிகவும் கணிக்கத்தக்கதாகிவிட்டது! இந்த நாடகம் எல்லாம் அவர்களின் சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே” என குற்றம்சாட்டி உள்ளர்

இச்சட்டத்தால் இந்துக்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக அண்ணாமலை கூறி உள்ளார். “முந்தைய வக்ஃப் சட்டத்தால் பாதிக்கப்பட்ட கட்சிகள் இந்துக்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் கூட என்பதை தமிழக முதல்வர் உணரவில்லையா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் “தயவுசெய்து உங்கள் நாடகத்திற்காக சட்டமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம், திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தொடர்ச்சியான நாடகம், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு “2025 வக்பு மசோதாவை எதிர்க்க அப்பாவின் முயற்சிகள்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத திமுக ஒருவரை நியமிப்பதாக இருக்கும். திமுக இதை ஒரு தேர்தல் தளமாக்கி 2026 சட்டமன்ற மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தல்களில் அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும். ஏமாற்றவும் பிரிக்கவும் மட்டுமே திமுகவுக்குத் தெரியும்” என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.