வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை தவெக போராட்டம்!

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தவெக சார்பாக நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மக்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணி வரை வக்ஃபு வாரிய திருத்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. இதன்பின் வாக்கெடுப்பு நடந்த நிலையில் வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு ஆதரவாக 288 வாக்குகளும், வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டசபையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதேபோல் வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நாளை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த கட்சித் தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் நாளை தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் வக்ஃபு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய், சென்னையில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் தவெக தரப்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேறி இருக்கும் நிலையில், தவெக தரப்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இதுவரை பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய மக்களை மட்டுமே விஜய் நேரில் சென்று சந்தித்துள்ளார். அதன்பின் அறிக்கைகள், வீடியோக்கள், எக்ஸ் பதிவுகள் என்று மட்டுமே விஜய் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் மாதத்திற்கு ஒரு கட்சி நிகழ்ச்சி என்று தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். இதனால் வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தவெக போராடத்தில் விஜய் பங்கேற்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.